இறுதி ஓவரில் மதீஷவை நம்பிய டோனி; சென்னைக்கு வெற்றி

IPL 2023

1241
IPL 2023

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 24ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்ட, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது சென்னை சுபர் கிங்ஸ் அணி.

பெங்களூர் சின்னசுவாமி அரங்கில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் ஆடிய சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவொன் கொன்வெ 45 பந்துகளில் தலா 6 சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளுடன் 83 ஓட்டங்களையும், சிவம் டூபே 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே 20 பந்துகளில் 37 ஓட்டங்களையும் என வேகமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

பின்வரிசையில் வந்த அம்பதி ராயுடு 6 பந்துகளில் 14 ஓட்டங்களையும், மொயின் அலி 9 பந்துகளில் 19 ஓட்டங்களையும் அதிரடியாக விளாசி, அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த இறுதிக் கட்டத்தில் உதவினர்.

இவர்களின் அதிரடிகளுடன் சென்னை சுபர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க உட்பட பெங்களூர் அணி பயன்படுத்திய அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் 227 என்ற மிகப் பெரிய இலக்கை எட்ட பதிலுக்கு ஆடிய பெங்களூர் அணிக்கு முதல் இரண்டு ஓவர்களுக்குள் ஆரம்ப வீரர் விராட் கோலி மற்றும் மஹிபல் லொம்ரொர் ஆகியோரின் விக்கெட்டுக்களை பறிகொடுக்க நேரிட்டது.

எனினும் அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் சென்னை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி 61 பந்துகளில் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளுடன் 76 ஓட்டங்களை பெற்றிருந்த கிளேன் மெக்ஸ்வெல்லின் விக்கெட்டை மஹீஷ் தீக்ஷன பெற, தொடர்ந்து 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளுடன் 62 ஓட்டங்களை பெற்றிருந்த பாப் டு ப்ளெசிஸின் விக்கெட்டும் வீழ்ந்தது.

அதன் பின்னர் பெங்களூர் அணியின் வெற்றி கேள்விக்குறியானது. எனினும், பின்வரிசையில் வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் சுயாஷ் ஆகியோர் அணியின் வெற்றிக்கு போராடிய போதும் அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்று, வெறும் 8 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணிக்கு இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசும் வாய்ப்பை அணித் தலைவர் டோனி இலங்கையின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கு வழங்கினார். டோனியின் நம்பிக்கைக்கு பலன் கொடுக்கும் வகையில் மதீஷ 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

சென்னை அணியின் பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டெ 3 விக்கெட்டுக்களையும் மதீஷ பதிரன 2 விக்கெட்டுக்களையும் அதிகப்பட்சமாக வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன், 5 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை சுபர் கிங்ஸ் அணி தரப்படுத்தலில் மூன்றாவது இடத்திலும் 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன.

போட்டியின் சுருக்கம்

சென்னை 226/6 – டெவொன் கொன்வெ 83 (45), சிவம் டூபே 52 (27), வனிந்து ஹசரங்க 21/1

பெங்களூர் 218/8 – கிளேன் மெக்ஸ்வெல் 76 (36), பாப் டு ப்ளெசிஸ் 62 (33), துஷார் தேஷ்பாண்டெ 45/3

முடிவு – சென்னை சுபர் கிங்ஸ் 8 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<