வெங்கடேஷ் அய்யரின் சதம் வீண்; கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை

Indian Premier League 2023

150
Kolkata Knight Riders vs Mumbai Indians

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் தனது முதல் IPL போட்டியில் களமிறங்கினார்.

இதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆரம்ப வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெகதீசனும், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸும் களமிறங்கினர். இதில் தடுமாறிய ஜெகதீசன், ஹிரித்திக் சோகீன் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து குர்பாஸ் 8 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் நிதிஷ் ராணா 5 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

எனினும் களம் இறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். IPL தொடரில் இது அவரது முதலாவது சதமாகும்.

மேலும், இந்த சதத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 15 ஆண்டுகால காத்திருப்பை முடித்து வைத்தார். முன்னதாக 2008ஆம் ஆண்டு ஆரம்பமாகிய முதல் IPL தொடரின் ஆரம்பப் போட்டியில் கொல்கத்த அணி வீரர் பிரண்டன் மெக்கலம் 158 ஓட்டங்களைக் குவித்திருத்தார்.

அதன்பிறகு கொல்கத்தா அணி சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக எந்தவொரு வீரரும் சதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 97 ஓட்டங்களைக் குவித்து இருந்தார்.

இந்நிலையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் IPL வரலாற்றில் கொல்கத்தா அணிக்காக சதமடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை வெங்கடேஷ் அய்யர் பெற்றுள்ளார்.

எனினும், சதமடித்து அடுத்த 2 பந்துகளை சந்தித்த நிலையில் 104 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்தார். இதில் 9 சிக்ஸர்களும், 6 பௌண்டரிகளும் அடங்கும். இறுதியாக, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 185 ஓட்டங்களைக் குவித்தது. மும்பை அணி தரப்பில் ஹிருத்திக் ஷோக்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்காக இம்பேக்ட் பிளேயராக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். இந்தக் கூட்டணி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட, அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

இதில் ரோஹித் சர்மா 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 25 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும், 5 பௌண்டரிகளும் அடங்கும்.

இம்முறை IPL தொடரில் போர்மில் இல்லாமல் தடுமாறிய சூர்யகுமார் யாதவ், பழைய ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினார். 25 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் 43 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 4 பௌண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13 பந்துகளில் 24 ஓட்டங்களை எடுக்க, மும்பை அணி வெற்றி இலக்கை 17.4வது ஓவரிலேயே வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியது. கொல்கத்தா அணி தரப்பில் சுயாஷ் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் மும்பை அணி 2ஆவது வெற்றியை பதிவு செய்தது. கொல்கத்தாவிற்கு இது 3ஆவது தோல்வியாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<