கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் இலங்கை சாதனை; அசான், வக்ஷானுக்கு தங்கம்

59th Sri Lanka Army Athletics Championship 2024

82

இலங்கை இராணுவத்தினால் 59ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்றுமுன்தினம் (31) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.  

இலங்கை இராணுவத்தில் உள்ள படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இம்முறை போட்டிகளில் 2 இலங்கை சாதனைகளுடன், 11 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.   

இம்முறை போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த இராணுவ மெய்வல்லுனர் வீரருக்கான விருதை ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை பீரங்கி படையணியின் சார்ஜன் அருண தர்ஷன தட்டிச் செல்லபெண்கள் பிரிவில் அதி சிறந்த மெய்வல்லுனராக பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இராணுவ மகளிர் படையணியின் பணி நிலை சார்ஜன் நதிஷா ராமநாயக்கசும் பெற்றுக் கொண்டார் 

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்கள் பிரிவில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை சூடியதுடன், இலங்கை இராணுவ பீரங்கி படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. 

பெண்கள் பிரிவில் இலங்கை இராணுவ மகளிர் படையணி ஒட்டுமொத்த சம்பியனானதுடன்இலங்கை இராணுவ பொதுச்சேவை படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது 

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 2 புதிய இலங்கை சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் புதிய இலங்கை சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார். குறித்த போட்டியில் 5.17 மீற்றர் உயரத்தைத் தாவியே அவர் புதிய எஎஇலங்கை சாதனையை நிலைநாட்டினார். 

கடந்த ஆண்டு தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற 58ஆவது இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இராணுவ பொதுச்சேவை படையணியைச் சேர்ந்த சச்சின் எரங்க ஜனித்தினால் கோலூன்றிப் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 5.16 மீற்றர் உயரம் என்ற இலங்கை சாதனையை புவிதரன் இம்முறை முறியடித்து சாதனை படைத்தார். 

அதேபோல, குறித்த பதிவானது புதிய போட்டிச் சாதனையாகவும், இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையாகவும் பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

யாழ். சாவக்கச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் 2021இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். அவர் தற்போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாயாகவும், அந்தப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார். 

இதேவேளை, ஆண்களுக்கான 4 X 200 மீற்றர் அஞ்சலோட்;டப் போட்டியில் இலங்கை பீரங்கி படை அணியினர் புதிய இலங்கை சாதனை படைத்தனர். குறித்த போட்டியை ஒரு நிமிடம், 29.93 செக்கன்களில் நிறைவு செய்தே இலங்கை பீரங்கி படையணியைச் சேர்ந்த அணியினர் இந்தப் புதிய சாதனையை நிலைநாட்டினர். 

இலங்கை சாதனை படைத்த 4 X 200 மீற்றர் அஞ்சலோட்ட அணியில் பபாசர நிக்கு, பசிந்து கொடிகார, மொஹமட் சபான் மற்றும் அருண தர்ஷன ஆகியோர் இடம்பெற்றனர். 

இது தவிர, ஆண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர், 3000 மீற்றர் தடைதாண்டல், 4 X 200 மீற்றர் அஞ்சலோட்டம், 4 X 400 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர், 10 ஆயிரம் மீற்றர், 100 மீற்றர் அஞ்சலோட்டம், 800 மீற்றர் அஞ்சலோட்டம், 1500 மீற்றர் அஞ்சலோட்டம் மற்றும் 7 அம்சப் போட்டி நிகழ்ச்சிகளில் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதுஇவ்வாறிருக்க, இம்முறை இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் மலையகம் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசுகின்ற வீரர்கள் அதிகமான பதக்கங்களை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இராணுவ காலாட் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான், 14 நிமிடங்கள் 43.28 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தப் போட்டியில் இராணுவ காலாட் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட ஜே.கே பிரசான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

அதேபோல, ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த வக்ஷான், 3 நிமிடங்கள் 50.92 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார் 

குறித்த போட்டியை 3 நிமிடங்கள் 51.80 செக்கன்களில் நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவர் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்காக விளையாடி வருகின்றார் 

ஆண்களுக்கான 10 அம்சப் போட்டிகளில் (decathlon) பங்குகொண்ட இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைச் சேர்ந்த மொஹமட் அசான், 6823 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 4ஆவது முறையாக இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அவர் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார் 

இதனிடையே, ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கி படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 20.96 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார் 

இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இராணுவ பீரங்கிப் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியை 31 நிமிடங்கள் 04.50 செக்கன்களில் அவர் நிறைவு செய்தார் 

இதேநேரம், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த சண்முகேஸ்வரன், 14 நிமிடங்கள் 50.94 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தினையும் வென்றெடுத்தார்.    

ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மலையக வீரர் சி. அரவிந்தன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டி தூரத்தை நிறைவுசெய்ய ஒரு நிமிடமும் 51.02 செக்கன்களை எடுத்துக் கொண்டார் 

ஆண்களுக்கான குண்டெறிதலில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியின் முன்னாள் மாணவரான சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 14.65 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான தட்டெறிதலில் 44.82 மீற்றர் தூரத்திற்கு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தினார் 

இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட ரது ரதுஷான், 71.13 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகதரித்தார். குறித்த போட்டியில் அவரது அதிசிறந்த தூரப் பெறுமதி இதுவாகும் 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<