இலங்கை அணியின் வெற்றியோட்டம் தொடருமா?

361

இம்முறை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தோல்வியினைத் தழுவாத இரண்டு அணிகளாக காணப்படும் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் சுபர் சிக்ஸ் மோதல் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறுகின்றது. 

கவனிக்க வேண்டிய விடயங்கள்  

இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி கடந்த கால தரவுகளை வைத்து பொதுவாக பார்க்கும் போது இலங்கை அணி ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதனை அவதானிக்க முடியும். ஆனால் இந்த தரவுகளை வைத்து ஜிம்பாப்வேயினை இலங்கை இலகுவாக வீழ்த்தும் எனக் கூறிவிட முடியாது.  

உலகக் கிண்ணத்தில் ஆட அரச அனுமதி கோரியுள்ள PCB

ஆனால் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரானது சொந்த நாட்டு சூழ்நிலைகளில் நடைபெற்று வருவதன் காரணமாக ஜிம்பாப்வே அணியே இலங்கை மோதலில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கை அணி  

இலங்கை அணி ஜிம்பாப்வே மோதலில் திருத்திக் கொள்ள வேண்டிய விடயமாக அணியின் துடுப்பாட்டத்துறை காணப்படுகின்றது. அணியின் எதிர்பார்ப்பு வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் மிகவும் பொறுப்பற்ற ஆட்டத்தினை கடந்த சில போட்டிகளில் இலங்கை அணிக்காக வெளிப்படுத்தியிருந்தனர். இந்த வீரர்கள் தமது துடுப்பாட்டப் பங்களிப்பினை வழங்கும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே இலங்கை சவாலான வெற்றி இலக்கு ஒன்றை ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயிக்க முடியும்.  

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது அணியின் சுழல்வீரர்கள் இலங்கைக்கு பலம் தரும் வீரர்களில் முக்கியமானவர்களாக காணப்படுகின்றனர். இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான போட்டி நடைபெறும் புலவாயோ மைதானம் சுழலுக்கு சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் அணிக்கு முக்கிய நம்பிக்கையாக காணப்படுகின்றனர்.  

உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேற்றம்

அதேவேளை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் தசை உபாதை ஒன்றின் காரணமாக லஹிரு குமார இலங்கை குழாத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்பட்டுள்ளதோடு அவரின் இடத்தினை அறிமுக சுழல்பந்து சகலதுறைவீரரான சஹான் ஆராச்சிகே பிரதியீடு செய்திருக்கின்றார்.  

உலகக்கிண்ண தகுதிகாண் தொடரிலிருந்து வெளியேறும் லஹிரு குமார

லஹிரு குமார இல்லாத நிலையில் கட்டாயமாக ஒரு மாற்றத்துடன் இலங்கை அணி களமிறங்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை எதிர்பார்க்கை குழாம் 

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, கசுன் ராஜித/மதீஷ பத்திரன 

ஜிம்பாப்வே அணி  

ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரை மிகவும் சமநிலையான வீரர் குழாத்துடன் இருக்கின்றது. அதன் சகலதுறைவீரர்களான சிக்கந்தர் ரஷா மற்றும் சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் அணியின் அதீத நம்பிக்கை கொண்ட வீரர்களாக காணப்படுகின்றனர். இந்த வீரர்களில் சோன் வில்லியம்ஸ் தொடரில் ஏற்கனவே அதிக ஓட்டங்கள் (532) பெற்ற வீரராக மாறியிருக்கின்றார். இதேவேளை சிக்கந்தர் ரஷாவும் அதிக ஓட்டங்கள் பெற்ற மற்றுமொரு வீரர்களில் ஒருவராக இருக்கின்றார். எனவே அணியின் துடுப்பாட்ட தூண்களாக இந்த இரண்டு வீரர்களும் இருக்க எதிர்பார்க்கப்படுகின்றது.  

மறுமுனையில் அணியின் பந்துவீச்சுத்துறைக்கு தென்டாய் சட்டரா, பிளெஸ்ஸிங் முஷாரபனி மற்றும் றிச்சார்ட் ன்கிராவா ஆகியோர் அணிக்கு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக பலம் சேர்க்க, வெலிங்டன் மஷகட்ஷா அணியின் பிரதான சுழல்வீரராக காணப்படுகின்றார்.  

ஜிம்பாப்வே எதிர்பார்க்கை குழாம் 

ஜோய்லோட் கம்பி, கிரைக் எர்வின் (தலைவர்), சோன் வில்லியம்ஸ், வெஸ்லி மதவ்வரே, சிக்கந்தர் ரஷா, றயான் பேர்ல், லூக் ஜொங்வே, வெலிங்டன் மஸகட்ஷா, றிச்சர்ட் ன்கிரவா, தென்டாய் சட்டாரா, பிளஸ்ஸிங் முஷாரபனி  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<