ஐ.பி.எல். நடப்புச் சம்பியனுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த ரிங்கு சிங்

227

2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் 14ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியினை, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ரிங்கு சிங்கின் அதிரடியோடு 3 விக்கெட்டுக்களால் வீழ்த்தி த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றியை தொடர்ந்து, ஐ.பி.எல். தொடரின் நடப்புச் சம்பியன்களான குஜராத் டைடன்ஸ் அணி 2023ஆம் ஆண்டு தொடரில் தமது முதல் தோல்வியினையும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தொடரில் இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜாராத் டைடன்ஸ் அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி இன்று (09) அஹமதாபாத் நகரில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்கள் எடுத்தது.

குஜராத் அணியின் துடுப்பாட்டம் சார்பில் விஜய் சங்கர் அதிரடி  அரைச்சதத்தோடு 24 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பெளண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 63 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சாய் சுதர்ஷன் அரைச்சதம் விளாசி 38 பந்துகளில் 53 ஓட்டங்கள் பெற்றார்.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் சுனீல் நரைன் 3 விக்கெட்டுக்களை சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 205 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா அணி, வெங்கடேஷ் ஐயர் மூலமாக சிறந்த துடுப்பாட்ட ஆரம்பத்தை பெற்ற போதும் பின்னர் குஜராத் டைடன்ஸ் அணிக்காக ரஷீட் கான் ஹட்ரிக்கை கைப்பற்ற தடுமாற்றமான நிலைக்குச் சென்றது. அதன்படி ஒரு கட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி போட்டியின் 17ஆவது ஓவரில் 155 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இவ்வாறு போட்டி முழுமையாக குஜராத் டைடன்ஸ் அணியின் பக்கம் மாறிய நிலையில் போட்டியின் இறுதி ஓவரில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. இறுதி ஓவரினை குஜராத் டைடன்ஸ் அணிக்காக வேகப்பந்துவீச்சாளரான யாஷ் டயால் வீச, குறித்த ஓவரின் முதல் பந்தில் களத்தில் இருந்த துடுப்பாட்டவீரரான உமேஷ் யாதவ் மூலம் ஒரு ஓட்டம் பெறப்பட்டது.

தொடர்ந்து போட்டியின் இறுதி 5 பந்துகளுக்கும் வெற்றிக்காக 28 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியின் இறுதி இறுதி 5 பந்துகளிலும் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை களத்தில் இருந்த மற்றைய துடுப்பாட்டவீரரான ரிங்கு சிங் விளாச, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து த்ரில்லான முறையில் 207 ஓட்டங்களுடன் அடைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் ரிங்கு சிங் 21 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுக்க, வெங்கடேஷ் ஐய்யர் 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் உடன் 83 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் குஜாராத் டைடன்ஸ்  அணியின் பந்துவீச்சில் ரஷீட் கான் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், அல்சாரி ஜோசேப் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ரிங்கு சிங் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

குஜாராத் டைடன்ஸ் – 204/4 (20) விஜய் சங்கர் 63(24)*, சாய் சுதர்ஷன் 53(38), சுனீல் நரைன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 207/7 (20) வெங்கடேஷ் ஐயர் 83(40), ரிங்கு சிங் 47(21)*, ரஷீட் கான் 37/3(4)

முடிவு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<