பிக்பேஷ் தொடரிலிருந்து ஓயும் அவுஸ்திரேலிய சகலதுறை நட்சத்திரம்

140

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் தொடரிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

1981 ஜூன் 17 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்தார் சகலதுறை கிரிக்கெட் வீரர் ஷேன் வொட்ஷன். 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக ஒருநாள் போட்டி மூலமாக சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த இவர் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் அரங்கிற்கு விடைகொடுத்தார்.

அதே போன்று 2005 ஆம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமான இவர் 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்தார். 2006 ஆம் ஆண்டு டி20 சர்வதேச போட்டி அறிமுகத்தை பெற்றுக்கொண்ட வொட்ஷன் 2016 ஆம் ஆண்டு முழு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்தும் ஓய்வு பெற்றிருந்தார்.

சொந்த மைதானத்தில் முதல் தோல்வியை சந்தித்த சென்னை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (26) நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை…

மொத்தமாக 307 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்த ஷேன் வொட்ஷன் சகலதுறை வீரர் என்ற ரீதியில் துடுப்பாட்டத்தில் 10,950 சர்வதேச ஓட்டங்களையும், பந்துவீச்சில் 291 சர்வதேச  விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

அதன் பின்னர் குறுகிய நேர விளையாட்டான டி20 போட்டிகளில் குறிப்பாக ஒவ்வொரு நாடுகளினாலும் நடாத்தப்படும் டி20 லீக் தொடர்களில் தொடர்ந்தும் விளையாடிவந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்துள்ள வொட்ஷன் டி20 லீக் போட்டிகளுக்கும் விடைகொடுத்து, ஒட்டு மொத்த கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுக்கும் நோக்கில் டி20 லீக் ஆட்டத்திலும் விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

அதன் முதல் கட்டமாக புகழ்பெற்ற லீக் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் லீக் தொடரிலிருந்து அவர் முழுமையாக ஓய்வு பெறுவதான அறிவிப்பை நேற்று (26) வெளியிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பேஷ் லீக் தொடரில் 2012 ஆம் ஆண்டு முதல் தடவையாக பிரிஸ்பேர்ன் ஹீட் அணி மூலமாக அத்தொடருக்குள் பிரவேசித்தார். மேலும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காகவும் விளையாடியிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2016 ஆம் நடைபெற்ற பிக்பேஷ் லீக் தொடரில் வொட்ஷனுக்கு அவ்வணியின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது.

சிட்னி தண்டர் அணியுடன் மேலும் இரண்டு வருடகாலம் விளையாடுவதற்கான ஒப்பந்தம் நீடிக்கப்பட்டது. இருந்தாலும் வொட்ஷன் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்பியுள்ளதன் காரணமாக இவ்வாறு திடீர் ஓய்வை அறிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 41 பிக்பேஷ் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வொட்ஷன் 1,031 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் இவ்வருடம் நடைபெற்ற தொடரில் பெற்றுக்கொண்ட ஒரு சதத்துடன் சேர்த்து ஆறு அரைச்சதங்களும் உள்ளடங்கும்.

37 வயதாகும் ஷேன் வொட்ஷன் பெயர்போன டி20 லீக் தொடர்களான ஐ.பி.எல் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பி.எஸ்.எல் தொடரில் குயீட்டா கிலாடியேடர்ஸ் (Quetta Gladiators) அணிக்காகவும் ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<