மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்த டெல்லி கெபிடல்ஸ்

92

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 44ஆவது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை டெல்லி கெபிடல்ஸ் அணி 05 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியுடன் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணி தம்முடைய மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்ய, இது குஜராத் டைடன்ஸ் அணிக்கு தொடரில் மூன்றாவது தோல்வியாக மாறியுள்ளது.

குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (02) அஹமதாபாதில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.  அதன்படி போட்டியில் டெல்லி அணி வீரர்கள் முதலில் துடுப்பாடி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்கள் எடுத்தனர்.

டெல்லி அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அமான் காகிம் கான் அரைச்சதம் விளாசி 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

மறுமுனையில் குஜராத் டைடன்ஸ் பந்துவீச்சில் மொஹமட் சமி 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹிட் சர்மா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 131 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் டைடன்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் வெற்றிக்காக ஹார்திக் பாண்டியா மற்றும் ராகுல் தேவட்டியா ஆகியோர் போராடியிருந்தனர்.

எனினும் இந்த வீரர்களின் போராட்டம் வீணாக இறுதியில் குஜராத் டைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

குஜராத் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹார்திக் பாண்டியா 7 பெளண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நிற்க, ராகுல் தேவட்டியா 7 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தார்.

ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பும் திமுத் கருணாரத்!

டெல்லி அணியின் வெற்றி இலக்கினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் கலீல் அஹ்மட் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 02 விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர். போட்டியின் ஆட்டநாயகன் விருதினை குஜராத் டைடன்ஸ் அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த மொஹமட் சமி பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

டெல்லி கெபிடல்ஸ் – 130/8 (20) அமான் காகிம் கான் 51(44), மொஹமட் சமி 11/4(4), மொஹிட் சர்மா 33/2(4)

குஜராத் டைடன்ஸ் – 125/6 (20) ஹார்திக் பாண்டியா 59(53)*, இஷாந்த் சர்மா 23/2(4), கலீல் அஹ்மட் 24/2(4)

முடிவு – டெல்லி கெபிடல்ஸ் 05 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<