தோல்வியுறாத அணியாக இலங்கை லெஜன்ட்ஸ்

448

வீதிப் பாதுகாப்பினை வலியுறுத்தும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்ட Road Safety World Series T20 தொடரில் இன்று (27) இலங்கை லெஜன்ட்ஸ் பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் அணியினை 70 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாத அணியாகவும் முன்னேறுகின்றது.

மூன்றாவது வெற்றியுடன் தொடரில் முன்னேறும் இலங்கை லெஜன்ட்ஸ்

இலங்கை லெஜன்ட்ஸ் அணி இந்த தொடரில் கடைசியாக நியூசிலாந்து லெஜென்ட்ஸ் வீரர்களை எதிர்கொள்ளவிருந்த போட்டி மழையினால் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷ் லெஜென்ட்ஸ் வீரர்களை எதிர்கொண்ட போட்டி ராய்பூரில் ஆரம்பமாகியிருந்தது.

தொடர்ந்து இந்த தொடரில் தாம் விளையாடிய எந்த போட்டிகளிலும் தோல்வியடையாத இலங்கை லெஜென்ட்ஸ் அணி, போட்டியில் முதலில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்களால் துடுப்பாடப் பணிக்கப்பட்டிருந்தது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை லெஜென்ட்ஸ் அணிக்கு சனத் ஜயசூரிய அட்டகசமான ஆரம்பத்தினை வழங்கினார். வெறும் 25 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்தார்.

அதேநேரம் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் மற்றும் மஹேல உடவத்த ஆகியோரும் அதிரடி துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை லெஜன்ட்ஸ் துடுப்பாட்டம் சார்பில் டில்ஷான் அரைச்சதம் பூர்த்தி செய்ததோடு 30 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்தார். மறுமுனையில் மஹேல உடவத்த 27 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் உடன் 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் பந்துவீச்சில் எலியாஸ் சன்னி, அப்துர் ரசாக், அலாம்கிர் கபீர், மொஹமட் சரீப் மற்றும் சஹாதத் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 214 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

தென்னாபிரிக்க தொடரிலிருந்து வெளியேறும் இந்திய வீரர்!

பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் துடுப்பாட்டம் சார்பில் துஷார் இம்ரான் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை எடுக்க, திலகரத்ன டில்ஷான் 3 விக்கெட்டுக்களையும், அசேல குணரட்ன 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை லெஜன்ட்ஸ் அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை லெஜன்ட்ஸ் – 213/5 (20) திலகரத்ன டில்ஷான் 51(30), மஹேல உடவத்த 43(27), சனத் ஜயசூரிய 37(25), அப்துர் ரசாக் 20/1(4)

பங்களாதேஷ் லெஜன்ட்ஸ் – 143/8 (20) துஷார் இம்ரான் 52(54), திலகரத்ன டில்ஷான் 26/3(3), அசேல குணரட்ன 24/2(4)

முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் 70 ஓட்டங்களால் வெற்றி

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<