வோர்னரின் போராட்டத்தில் டெல்லி அணிக்கு முதல் வெற்றி

113

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கெபிடல்ஸ் அணி நடப்பு IPL தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

IPL தொடரில் நேற்று (20) இரவு நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் ஆடும் முதல் IPL போட்டி இதுதான்.

அதன்படி அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். லிட்டன் தாஸ் 4 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் வெங்கடேஷ் ஐயர் ஓட்டம் எதுவும் எடுக்காமலும், நிதிஷ் ராணா 4 ஓட்டங்களையும், மந்தீப் சிங் 12 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 6 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜேசன் ரோய் 43 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, கடைசியில் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசிய அண்ட்ரூ ரசல் 31 பந்துகளில் 38 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை எடுத்தது.

டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா, நோர்ஜே, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் ஓரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் டேவிட் வோர்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷா 13 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் 2 ஓட்டங்களுடனும், பிலிப் சோல்ட் 5 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இருப்பினும் அதிரடியாக விளையாடிய டேவிட் வோர்னர் நடப்பு IPL தொடரில் தனது 4ஆவது அரைச் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். IPL கிரிக்கெட்டில் தனது 59ஆவது அரைச் சதத்தை எட்டிய வோர்னர் 57 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மனீஷ் பாண்டே 21 ஓட்டங்களையும், அடுத்து வந்த அமான் கான் ஓட்டம் எதுவுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர்.

இருப்பினும் இறுதிவரை களத்திலிருந்த அக்கர் படேல் 19 ஓட்டங்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி கெபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பாண்டு IPL தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. அதேபோல, கொல்கத்தா அணி 4ஆவது தோல்வியைத் தழுவியது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<