ஷாமரி அத்தபத்துவின் அதிரடியினால் டிவிஷன் l சம்பியன் கிண்ணம் விமானப்படைக்கு

330
Army vs Air Force

இந்த ஆண்டுக்கான டிவிஷன் l மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான தொடரின் இறுதிப் போட்டியில் ராணுவப்படை மகளிர் அணியை 61 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இலங்கை விமானப்படை மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.  

சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்வதற்கு தேவையான திறமைகள் இலங்கையிடம் உள்ளதுஅலன் டொனால்ட்

கொழும்பு, எம்.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விமானப்படை மகளிர் அணி துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில், முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.  

அந்த வகையில் முதலில் களமிறங்கிய விமானப்படை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களைப் பதிவு செய்தது.  

விமானப்படை மகளிர் அணி சார்பாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தேசிய அணி வீராங்கனை ஷாமரி அத்தபத்து அதிக பட்ச ஓட்டங்களாக 60 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், மேலும் இரு தேசிய அணி வீராங்கனைகளான யசோதா மெண்டிஸ் மற்றும் டிலானி மனோதார   ஆகியோர் முறையே 41 மற்றும் 24 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு பங்களிப்பு செய்தனர். இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய ஆமா காஞ்சனா ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

அதேவேளை, பந்து வீச்சில் ஓட்டங்களை மட்டுப்படுத்தி விமானப்படை அணிக்கு நெருக்கடி கொடுத்து, ராணுவ அணி சார்பாக சுகந்திக்கா குமாரி 21 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும், லக்மாலி மெத்தானந்த மற்றும் நிலூக்கா கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.   

அதனையடுத்து, 190 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ராணுவ மகளிர் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமானப்படை மகளிர் அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த ராணுவப்படை மகளிர் அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 129 ஓட்டங்களுக்கே தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் காரணமாக கிண்ணத்தின் சொந்தக்காரர்களைத் தீர்மாணிக்கும் இந்த தீர்க்கமான இறுதிப் போட்டியில் ராணுவப்படை மகளிர் அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக, பந்து வீச்சிலும் பிரகாசித்த லக்மாலி மெத்தானந்த 29 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அனைவரும் பிரகாசிக்கத் தவறினர்.

.சி.சி. இன் ஒரு நாள் தரவரிசையில் மேலும் வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

சிறப்பாகப் பந்து வீசிய ஷாமரி பொல்கம்பொல மற்றும் ஷாமரி அத்தபத்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு பந்து வீச்சில் பங்களிப்பு வழங்கினர்.

போட்டியின் சுருக்கம்  

விமானப்படை மகளிர் அணி: 190/9 (50) – ஷாமரி அத்தபத்து 60, யசோதா மெண்டிஸ்  41, டிலானி மனோதார   24, ஆமா காஞ்சனா 23*, ஒஷாடி ரணசிங்க 21, சுகந்திக்கா  குமாரி 3/21, லக்மாலி மெத்தானந்த 2/38, நிலூக்கா கருணாரத்ன  2/39

ராணுவப்படை மகளிர் அணி: 129 (45.4) – லக்மாலி மெத்தானந்த 27, ஷாமரி பொல்கம்பொல  2/13, ஷாமரி அத்தபத்து 2/28

போட்டியில் முடிவு – இலங்கை விமானப்படை அணி 61 ஓட்டங்களால் வெற்றி