மத்திய ஆசிய மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் சம்பியானகிய இலங்கை

55

பங்களாதேஷில் நடைபெற்ற மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அணி சம்பியனானது.

தோல்வி அடையாத அணியாக நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற நேபாளத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 2 நேர் செட்களில் வெற்றி பெற்றதன் மூலம் சத்துரிகா மதுஷானி மற்றும் தீபிகா பண்டார ஜோடி இலங்கைக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்கள்.

பங்களாதேஷின் கொக்ஸ் பஸாரில் நடைபெற்ற மத்திய ஆசிய மகளிர் கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் பங்களாதேஷைச் சேர்ந்த 2 அணிகள், உஸ்பகிஸ்தானைச் சேர்ந்த 2 அணிகள், நேபாளத்தைச் சேர்நத் ஒரு அணியும், இலங்கையைச் சேர்ந்த ஒரு அணியும் என மொத்தமாக 6 நாடுகள் பங்கேற்றன.

இதில் முதல் சுற்றுக்கான ஆரம்பப் போட்டியில் வரவேற்பு நாடான பங்களாதேஷை 21 – 8, 21 – 5 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி, இரண்டாவது போட்டியில் உஸ்பெகிஸ்தானை 21 – 11, 21 – 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதிப் போட்டியில் மீண்டும் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அபாரமாக விளையாடி 21 – 8, 21 – 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.

இதன்படி, இறுதிப் போட்டியில் நேபாளத்தை சந்தித்த இலங்கை அணி, 21 – 11, 21 – 11 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றி பெற்று சம்பியனானது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிராந்தியங்களுக்கு இடையிலான சர்வதேச கடற்கரை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இலங்கை அணி உறுதி செய்தது.

சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியின் தலைவியாக இராணுவ வீராங்கனை சத்துரிகா மதுஷானி செயல்பட, அவருடன் கடற்படை வீராங்கனை தீபிகா பண்டார விளையாடியிருந்தார். அத்துடன், இலங்கை அணியின் பயிற்சியாளராக தக்ஷிலா குணசிங்க பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<