“வடக்கின் கில்லாடி யார்?” அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள றோயல், உருத்திரபுரம் அணிகள்

378

Thepapare.com ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதிப்போட்டிகள் நேற்று முன்தினமும், நேற்றைய தினமும் இடம்பெற்றிருந்தன.

ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம்

யாழ் மாவட்டத்தின் புகழ்பெற்ற அணியான ஊரெளு றோயல் அணியினை எதிர்த்து வடமராட்சி லீக்கின் முன்னணி அணியான நவிண்டில் கலைமதி அணி மோதியது.

இப்போட்டி எதிர்பார்ப்பிற்கு சற்றும் குறைவில்லாது மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

முதல் பாதியின் 42 ஆவது நிமிடத்தில் கலைமதி அணியின் பாணுப்பிரியன் போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

முதலாவது பாதி ஆட்டத்தின் மேலதிக நிமிடத்தில் றோயல் அணியின் பிரசன்னா கோல் போட்டு, கோல் கணக்கை சமநிலை செய்தார்.

முதல் பாதி ஆட்டத்தின் நிறைவில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவு செய்திருந்தனர்.

இரண்டாவது பாதி ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி நிறைவிற்கு வர போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: றோயல் விளையாட்டுக் கழகம் 1 – 1  கலைமதி விளையாட்டுக் கழகம்

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டி சமநிலையில் நிறைவிற்கு வர அரையிறுதிக்கு தகுதிபெறும் அணியைத் தீர்மானிப்பதற்கு பெனால்டி உதை இடம்பெற்றது. பெனால்டி உதையில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற றோயல் அணி அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஆட்டநாயகன்சன்சஜன் (றோயல் வி.க)

கோல் பெற்றவர்கள்

கலைமதி விளையாட்டுக் கழகம் – பாணுப்பிரியன் 42′

றோயல் விளையாட்டுக் கழகம் – பிரசன்னா 46′


கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம்

நேற்றைய தினம் இடம் பெற்ற இறுதி காலிறுதி ஆட்டத்தில் கிளிநொச்சி லீக்கின் பலம்பொருந்திய அணிகளான உருத்திரபுரம் அணியை எதிர்த்து உதயதாரகை அணி போட்டியிட்டிருந்தது.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்த போட்டியில், ஆட்டநேர நிறைவில் இரு அணிகளும் தலா இரு கோல்களைப் பதிவு செய்திருந்தன.

தொடர்ந்து இடம்பெற்ற பெனால்டி உதையில் 4 – 3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்ற உருத்திரபுரம் அணி “வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

உருத்திரபுரம் அணி FA கிண்ண சுற்றுப்போட்டியின் இறுதி 16 அணிகளுக்கு இடையிலான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் 02:02 உதயதாரகை விளையாட்டுக் கழகம்

ஆட்டநாயகன் தேனுஜன் (உருத்திரபுரம் வி.க)

கோல் பெற்றவர்கள்

உதயதாரகை விளையாட்டுக் கழகம் – ஜெயந்தன், அன்ரனி ராஜ்

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் – ஹரீஸ், தேனுஜன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 32 முன்னணி உதைப்பந்தாட்ட அணிகள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தினரால் தேர்வு செய்யப்பட்டு, சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கின் கில்லாடி யார்? என்பதனைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்டு வரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.

அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளுள் றோயல், யங் ஹென்றீசியன்ஸ் மற்றும் நடப்புச் சம்பியன்களான பாடும்மீன் அணி ஆகிய மூன்று அணிகளும் கடந்த வருடம் இடம்பெற்ற யாழின் கில்லாடி தொடரிலும் அரையிறுதியில் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட இறுதிப்போட்டியாளர்களான ஞானமுருகன் அணியினர் முதலாவது சுற்றுடன் வெளியேறியிருந்த அதேவேளை, நான்காவது அணியாக கிளிநொச்சியின் ஒரே அணியான உருத்திரபுரம் அணி கிண்ணத்திற்கான இறுதி மோதலில் எஞ்சியுள்ளன.

“வடக்கின் கில்லாடி யார்?” – இறுதிச் சுற்று

  • முதலாவது அரையிறுதி – 02.10.2018

இளவாலை யங்ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்

  • இரண்டாவது அரையிறுதி – 04.10.2018

ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகம் எதிர் குரூநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம்

  • மூன்றாவது இடத்திற்கான போட்டி – 06.10.2018
  • “வடக்கின் கில்லாடி யார்?” – இறுதிப்போட்டி – 07.10.2018

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<