2021 IPL முதல் பாதியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்

Indian Premier League - 2021

237
IPL 2021 - bowlers cover image

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் இரண்டாவது பாதி போட்டிகள் இம்மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அபுதாபி, டுபாய் மற்றும் சார்ஜா மைதானங்களில் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரின் முதல் பாதி போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய 5 வீரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.

  1. ஹர்ஷல் பட்டேல் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்) – 17 விக்கெட்

    Harshal
    IPL Twitter

30 வயதான ஹர்ஷல் படேல் IPL தொடருக்கு புதியவர் அல்ல, அவர் கடந்த 2012 முதல் IPL தொடரில் விளையாடி வருகிறார். அவர் பங்கேற்ற ஏழு பருவங்களில், 41 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.

>> IPL தொடரில் சமீர, ஹஸரங்க விளையாடுவதற்கு SLC அனுமதி!

ஹரியானாவைச் சேர்ந்த வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான இவர், IPL தொடரின் முன்னைய சில பருவங்களில் நிறைய ஓட்டங்களை விட்டுக்கொடுத்து தடுமாறியிருந்தார்.

எனினும், இந்த ஆண்டு விராட் கோஹ்லி தலைமையிலான RCB அணியில் இடம்பிடித்து விளையாடிய அவர், அபாரமாக பந்துவீசி முதல் பாதி ஆட்டங்களின் முடிவில் 17 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி, IPL வரலாற்றில் முதல் போட்டியில் 5 விக்கெட் பிரதியைப் பெற்றுக்கொண்ட முதல் பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.

  1. அவேஷ் கான் (டெல்லி கெபிடல்ஸ்) – 14 விக்கெட்

    IPL Twitter

2017இல் RCB அணிக்காக விளையாடிய 24 வயது இளம் வீரரான அவேஷ் கான், இந்த ஆண்டு IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்தூரைச் சேர்ந்த வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான இவர், இம்முறை பருவத்தில் பந்துவீச்சில் மிரட்டியிருந்ததுடன், எம்எஸ் டோனி, விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

IPL தொடரின் முதல் பாதியில் 8 போட்டிகளில் விளையாடிய அவர், இதுவரை 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்,

2021 IPL பருவத்திற்கு முன்பு, 9 போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தார். ஆனால் இம்முறை தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார்.

 >> IPL போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

  1. கிறிஸ் மொரிஸ் (ராஜஸ்தான் ரோயல்ஸ்) – 14 விக்கெட்

    IPL Twitter

2021 பருவத்திற்கு முன்னதாக நடைபெற்ற IPL ஏலத்தில் கிறிஸ் மொரிஸை வாங்குவதற்கு பல அணிகள் போட்டியிட்டியிருந்ததுடன், இறுதியில் அவரை 16.25 கோடி ரூபாவுக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. இதனால் IPL வரலாற்றில் அதிக தொகையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக இவர் இடம்பிடித்தார்.

IPL தொடரின் முதல் பாதியில் ராஜஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இடம்பிடித்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் உபாதைக்குள்ளாகியதை அடுத்து ராஜஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சை வழிநடத்துகின்ற முழுப் பொறுப்பும் இவர் மீது சுமத்தப்பட்டது.

எனவே, IPL அறிமுக வீரர் சேத்தன் சகாரியா மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோரின் உதவியுடன் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை எடுத்து இம்முறை பருவத்தில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

அதேபோல, துடுப்பாட்டத்திலும் தேவைப்படும் போது ராஜஸ்தான் அணிக்கு பயனுள்ள ஓட்டங்களை அவர் பெற்றுக்கொடுத்தார்.

>> T20 தலைவர் பதவியிலிருந்து விலகும் விராத் கோஹ்லி

  1. ராகுல் சாஹர் (மும்பை இந்தியன்ஸ்) – 11 விக்கெட்

    IPL Twitter

2019 பருவத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக இணைந்துகொண்ட ராகுல் சாஹர் அந்த அணியின் முதன்மையான சுழல் பந்துவீச்சாளராக மாறினார்.

அவர் அந்த அணிக்காக விளையாடிய 16 ஆட்டங்களில் 13 போட்டிகளில் களமிறங்கினார். இதில் 2020 IPL பருவத்தில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மும்பை அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டதுடன், அதற்கான வெகுமதிகளும் அவருக்கு அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான IPL தொடரின் முதல் பாதியில் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் 4ஆவது இடத்தில் உள்ளார்.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

>> IPL தொடலிருந்து இங்கிலாந்தின் 3 வீரர்கள் திடீர் விலகல்

  1. ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) – 10 விக்கெட்

    IPL Twitter

சமீபத்திய IPL பருவங்களில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களுக்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்த வீரர்களில் ஒருவராக ரஷித் கான் உள்ளார்.

இம்முறை IPL தொடரின் முதல் பாதியில் நடராஜன் அல்லது புவனேஸ்வர் குமார் போன்ற வழமையான பந்துவீச்சாளர்கள் காயங்களால் பாதிக்கப்பட, மற்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்காக விக்கெட் எடுக்கின்ற முன்னிலை வீரராக ரஷித் கான் மாறினார்.

இந்த பருவத்தில் 7 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, IPL தொடரின் முதல் பாதியின் முடிவில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் சாம் கரண் (சென்னை சுப்பர் கிங்ஸ் – 9 விக்கெட்டுக்கள்), பட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 9 விக்கெட்டுக்கள்), கைல் ஜேமிசன் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – 9 விக்கெட்டுக்கள்), தீபக் சாஹர் (சென்னை சுப்பர் கிங்ஸ் – 8 விக்கெட்டுக்கள்), மொஹமட் ஷமி (பஞ்சாப் கிங்ஸ் – 8 விக்கெட்டுக்கள்) ஆகியோர் 6 முதல் 10 வரையான இடங்களைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<