செபஸ்டியனைட்ஸ் கழகத்தை வீழ்த்தி சம்பியனானது SSC

SLC Major Clubs 50 Over Tournament 2023/24

58
SLC Major Clubs 50 Over Tournament 2023/24

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023/24 பருவகாவத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் லீக் ஒருநாள் தொடரின் சம்பியன் பட்டத்தை SSC கழகம் வெற்றி கொண்டது.

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் SSC கழகம் சார்பில் துடுப்பாட்டத்தில் மிரட்டிய 25 வயதான விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான க்ரிஷான் சன்ஜுல அரைச் சதம் கடந்து 84 ஓட்டங்களை எடுக்க, பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர்.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்கள் 22 பங்கேற்ற மேஜர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) நடைபெற்றன.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த SSC கழகம், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணிக்காக க்ரிஷான் சன்ஜுல 125 பந்துகளில் ஒரு சிக்ஸர் 5 பௌண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களையும், சமிந்து விக்ரமசிங்க 43 பந்துகளில் 36 ஓட்டங்களையும், ஷெவோன் டேனியல் 58 பந்துகளில் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.

SSC கழகத்தின் பந்துவீச்சில் இஷித விஜேசுந்தர, துஷான் விமுக்தி மற்றும் சாமிகர எதிரிசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 209 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய செபஸ்டியனைட்ஸ் கழகம் SSC கழக வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 42 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவினர். செபஸ்டியனைட்ஸ் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சாமிகர எதிரிசிங்க 37 ஓட்டங்களை எடுத்தார்.

SSC கழகத்தின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கிஷான் பாலசூரிய மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இறுதியில் 71 ஓட்டங்களினால் அவிஷ்க பெர்னாண்டோ தலைமையிலான SSC கழகம் வெற்றயீட்டி சம்பியனாகத் தெரிவாகியது.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 2023/24 பருவகாவத்துக்கான முதல்தர கழகங்களுக்கிடையிலான 3 நாட்கள் கிரிக்கெட் தொடரில் எஸ்எஸ்சி கழகம் சம்பியனாக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இம்முறை மேஜர் லீக் ஒருநாள் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற SSC கழகத்துக்கு ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு 75 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக SSC கழகத்தின் க்ரிஷான் சன்ஜுல தெரிவாகியதுடன், தொடரின் நாயகனாக செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் சுழல் பந்துவீச்சாளர் துஷான் விமுக்தி தெரிவானார்.

இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை காலி கிரிக்கெட் கழகத்தின் இரோஷ் சமரசூரிய பெற்றுக்கொள்ள, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை BRC கழகத்திற்காக ஆடி இம்முறை போட்டித் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மர்வின் அபினாஷ் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

SSC கழகம் – 201/8 (50) – க்ரிஷான் சன்ஜுல 84, சமிந்து விக்ரமசிங்க 36, ஷெவோன் டேனியல் 35, துஷான் விமுக்தி 2/39

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 130/10 (42) – சாமிகர எதிரிசிங்க 37, பிரமோத் மதுவன்த 21, பிரபாத் ஜயசூரிய 3/25

முடிவு – SSC கழகம் 71 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<