IPL தொடலிருந்து இங்கிலாந்தின் 3 வீரர்கள் திடீர் விலகல்

Indian Premier League - 2021

335

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் திடீரென விலகுவதாகத் அறிவித்துள்ளனர்.

இதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜொனி பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் வீரர் டாவிட் மலான் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணியின் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்

இந்திய – இங்கிலாந்து 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்தபின், உயிரியல் பாதுகாப்பு வலய பரிமாற்றம் முறையில் இரு அணி வீரர்களும் தனி விமானத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்கள்

ஆனால், இந்திய அணிக்குள் கொரோனா புகுந்ததையடுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால் இரு அணிகளுக்குமிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் IPL அணி நிர்வாகங்கள் தங்கள் சொந்த செலவில் வீரர்களை அழைத்துக் கொள்ளலாம் என BCCI தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல் IPL தொடருக்காக இங்கிலாந்தில் இருந்துவரும் ஒவ்வொரு வீரரும் ஆறு நாட்கள் கட்டாயத் சுய தனிமையில் இருந்து அதில் கொரோனா தொற்று இல்லை என உறுதியான பின்புதான் அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல முடியும் என BCCI அறிவித்தது.

இதனிடையே, கொரோனா அச்சம், IPL காரணமாக இங்கிலாந்துடனான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க மறுத்தமை மற்றும் BCCIயினால் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் இங்கிலாந்து வீரர்கள் மூவர் IPL தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்

இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண அணி அறிவிப்பு

இங்கிலாந்து வீரர்களான பேர்ஸ்டோ, டேவிட் மலான், கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகத் தெரிவித்தாலும், 6 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் அவர்களைக் கடுமையாக பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் IPL தொடரிலிருந்து விலகிய நிலையில், மேலும் 3 வீரர்கள் IPLஇல் இருந்து விலகி இருப்பது அணிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

இதனிடையே, இந்த வீரர்களுக்குப் பதிலரக உடனடியாக மாற்று வீரர்களை அறிவிக்க இந்த அணிகள் நடவடிக்கை எடுத்தன.

பல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்

கிங்ஸ் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் மலானுக்குப் பதிலாக தென்னாபிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஜோனி பேர்ஸ்டோவுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகளின் ஷெபார்ன் ரூதர்போர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சன்ரைசர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து வீரர்களான மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கரண், டொம் கரண், ஜோர்ஜ் கார்டன், இயென் மோர்கன், கிறிஸ் ஜோர்டன், ஆடில் ஷீத், லியெம் லிவிங்ஸ்டன், ஜேசன் ரோய் ஆகிய வீரர்கள் IPL தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…