இலங்கை A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் A

Pakistan A tour of Sri Lanka 2021

246

சுற்றுலா பாகிஸ்தான் A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதன்படி, இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 என பாகிஸ்தான் A அணி கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் A அணி, நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளைக் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், இலங்கை A – பாகிஸ்தான் A அணிகளுக்கிடையில் கடந்த 11ஆம் திகதி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் A அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி 1-0 என முன்னிலை பெற்றது.

இதனிடையே, கடந்த 13ஆம் திகதி நடைபெறவிருந்த 2ஆவது ஒருநாள் போட்டி ஒரு ஓவர் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் மழையினால் கைவிடப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (15) தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் A அணி, 32 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டது.

எனவே, தொடர்ந்து பெய்ந்த மழையினால் போட்டியை நடாத்துவதற்கான சூழல் இருக்கவில்லை.  இதன் காரணமாக போட்டியை நடத்த முடியாது என தீர்மானித்த போட்டி நடுவர்கள், 3ஆவது போட்டியையும் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இதேநேரம், மழைக்கு முன்னரான ஆட்டத்தில் பாகிஸ்தான் A அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஒமைர் யூசுப், 72 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களையும் அணித்தலைவர் சவுத் சகீல் 72 பந்துகளுக்கு முகங்கொடுத்து ஒரு சிக்ஸர், 4 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

மறுமுனையில், இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் அஷைன் டேனியல் 2 விக்கெட்டுக்களையும், ஹிமேஷ் ராமநாயக்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் A அணி – 167/4 (32) – ஒமைர் யூசுப் 59, சவுத் சகீல் 59*, அஷைன் டேனியல் 2/44, கமிந்து மெண்டிஸ் 1/9

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<