வில்லாவுக்கு எதிராக சிட்டி கோல் மழை: தொடர்ந்து கோல் பெறும் ரொனால்டோ

194

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், இத்தாலி சிரீ A மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

அஸ்டன் வில்லா எதிர் மான்செஸ்டர் சிட்டி

செர்கியோ அகுவேராவின் ஹட்ரிக் கோல் மூலம் அஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியில் கோல் மழை பொழிந்த மான்செஸ்டர் சிட்டி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

ஆர்ஜன்டீனாவின் முன்கள வீரரான அகுவேராவின் 12 ஆவது ஹட்ரிக் கோல் இதுவென்பதோடு ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்ற வெளிநாட்டு வீரர் எனவும் சாதனை படைத்தார். 177 கோல்களை பெற்றிருக்கும் அவர் பிரான்க் லம்பர்டின் சாதனையை சமன் செய்தார். 

ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் பெற்றவர்கள் வரிசையில் அலன் ஷீரர், வெயின் ரூனி மற்றும் அன்டி கோல் ஆகியோர் மாத்திரமே இவரை விடவும் முன்னிலையில் உள்ளனர். 

ரியாத் மஹ்ரஸ் இரட்டை கோல் மற்றும் அகுவேரா, காப்ரியல் ஜேசுஸின் கோல்கல் மூலம் நடப்புச் சம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் பாதி ஆட்டத்தில் 4-0 என முன்னிலை பெற்றது. 

பெரிதும் வெற்றி உறுதியான நிலையில் இரண்டாவது பாதியை ஆரம்பித்த மான்செஸ்டர் சிட்டி சார்பில் அகுவேரா 57 மற்றும் 81 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பெற்றார். போட்டியின் மேலதிக நேரத்தில் கிடைத்த பெனால்டி மூலம் அஸ்டன் வில்லாவினால் ஒரு கோலை பெற முடிந்தது. 

இந்த வெற்றியுடன் சிட்டி புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் அந்த அணி முதல் இடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் 14 புள்ளிகளால் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜுவன்டஸ் எதிர் ரோமா

ஜுவன்டஸ் சார்பில் தொடர்ந்து கோல்களை குவித்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரோமா அணிக்கு எதிரான போட்டியில் தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய ஜுவன்டஸ் சிரீ A தொடரில் முதலிடத்திற்கு முன்னேறியது. 

போட்டி ஆரம்பத்தின் 3ஆவது நிமிடத்தில் மெரிஹ் டெமிரால் பெற்ற கோல் மூலம் ஜுவான்டஸ் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 10 ஆவது நிமிடத்தில் ரொன்டோ பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொண்டு டிகோ பெரோட்டி ரோமா சார்பில் கோல் திருப்பியபோதும் ஜுவன்டஸின் வெற்றியை தடுக்க முடியவில்லை. 

ரொனால்டோ இந்தப் பருவத்தில் பெறும் 14 ஆவது கோலாக இது இருந்தது. கடைசியாக அவர் ஆடிய ஆறு சிரீ A போட்டியில் பெறும் ஒன்பதாவது கோல் இதுவாகும்.   

PSG எதிர் மொனாகோ

நெய்மாரின் இரட்டை கோல் மற்றும் ஒரு கோல் உதவியோடு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சோபித்தபோதும் மொனாகோ அணிக்கு எதிரான இந்தப் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது.  

போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே நெய்மார் கோல் பெற்ற நிலையில் மொனாகோ 07 மற்றும் 13 ஆவது நிமிடங்களில் விரைவாக இரண்டு கோல்களை பெற்றது. 

எனினும் 24 ஆவது நிமிடத்தில் போடே பல்லோ டூர்ரோவின் ஓன்கோல் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த நிலையில் நெய்மார் 42 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை போட்டார். 

இந்நிலையில் இஸ்லாம் ஸ்லிமானி 70 ஆவது நிமிடத்தில் புகுத்திய சர்ச்சைக்குரிய கோல் ஒன்றின் மூலம் மொனாகோ போட்டியை சமநிலை செய்தது. இந்த கோல் ஆரம்பத்தில் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே கோலாக ஏற்கப்பட்டது. 

எனினும் PSG லீக் 1 புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<