பதுளை, வின்சன்ட் டயஸ் அரங்கில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தை வீழ்த்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழகம், 19 தடவைகள் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 13 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். யாழ் பல்கலைக்கழகம் 1979, 1980, 1992, 1995, 1998, 2001, 2005, 2009, 2011, 2013, 2014, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை வென்றுள்ளது. 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு 1977, 1982, 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது.

அரையிறுதியில் பலம்கொண்ட யாழ் பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக அணிகள் மோதியபோது இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. இதனால் பெனால்டி முறையில் யாழ் பல்கலைக்கழகம் 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

மற்றைய அரையிறுதிப் போட்டி 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் சமனான நிலையில், பேராதனை பல்கலைக்கழகம் பெனால்டி உதைகளால் 4-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை வென்றது.

திரித்துவக் கல்லூரியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்த புனித தோமியர் கல்லூரி

குழு நிலைப் போட்டியில் பெனால்டிகளால் தோற்றதற்கு பதிலடியாக மொரட்டுவை பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி 3ஆம் இடத்தைப் பிடித்தது.

இந்த தொடரின் A குழுவில் யாழ் பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ருஹுனு பல்கலைக்கழகம் இடம்பிடித்தன. B குழுவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆகியன விளையாடின. தென் கிழக்கு பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகம் C குழுவில் பங்கேற்றதோடு குழு D இல் கொழும்பு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் இடம்பிடித்திருந்தன.

இதன்படி A குழுவில் இருந்து யாழ் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றதோடு B குழுவில் இருந்து மொரட்டுவை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் தகுதி பெற்றன. தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் C குழுவில் இருந்து காலிறுதிக்கு முன்னேறின.

D குழுவில் எந்தப் போட்டியிலும் தோற்காத சப்ரகமுவ பல்கலைக்கழகம் காலிறுதிக்கு தகுதி பெற்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தபோதும் களனி பல்கலைக்கழகம் வயம்பவை வென்றது. இதனால் கொழும்பு பல்கலைக்கழகம் D குழுவில் இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

காலிறுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகத்தை பெனால்டி உதைகளின் மூலம் வென்றது. போட்டி 1-1 என்று சமநிலையானதை அடுத்தே பெனால்டி சூட்அவுட்டுக்கு சென்றது. தென் கிழக்கு மற்றும் யாழ் பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டி 90 நிமிட முடிவில் பெரும் பரபரப்போடு 2-2 என்ற கோல்களால் சமனானது. எனினும் பெனால்டி உதை மூலம் யாழ் பல்கலைக்கழகம் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

மூன்றாவது காலிறுதியில் சப்ரகமுவ பல்கலைக்கழகம் முதல் பாதியில் கோல் ஒன்றை போட்டபோதும் மொரட்டுவை பல்கலைக்கழகம் மேலதிக நேரத்தில் கோலொன்றை போட்டு சமநிலை செய்தது. இதனால் பெனால்டி மூலம் போட்டியில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தால் வெற்றியை உறுதி செய்ய முடிந்தது. விறுவிறுப்புடன் இடம்பெற்ற நான்காவது காலிறுதியில் பேராதனை பல்கலைக்கழகம் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது.