எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய ரக்பி போட்டிகள் மலேசியாவில் நடைபெறவிருக்கின்றன. இதில் நடப்பு சம்பியன் ஹொங்கொங், சைனீஸ் தைப்பே மற்றும் மலேசியா போன்ற அணிகளுடன் இலங்கை போட்டியிடவுள்ளது. இப்போட்டிகளில் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ளும் அணி, அடுத்த வருடம் ஸ்பெய்னில் நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக ரக்பி சம்பியன்ஷிப் 2017 போட்டிக்கு தகுதிபெறும். 

கடந்த ஆண்டில் இடம்பெற்ற போட்டிகளில் ஹொங்கொங் ரக்பி அணி மூன்று போட்டிகளிலும் வென்று, சிம்பாப்வே  ஹராரே நகரில் நடந்த உலக ரக்பி சம்பியன்ஷிப்பிற்கு தெரிவாகியது. எனினும், அதில் ஸ்பெயினிடம் 44-08, அமெரிக்காவிடன் 33-12 மற்றும் நமிபியாவிடன் 70-08 என்ற கணக்கில் சகல போட்டிகளிலும் தோல்வியுற்றது.

கடந்தாண்டின் ஆசிய ரக்பி போட்டிகளின் பெறுபேறுகள்

Asia Rugby U19 Last year Fixtures
(Courtesy ARFU)

(தகவல்-ஆசிய ரக்பி கால்பந்து ஒன்றியம்)

பலம் வாய்ந்த ஹொங்கொங் அணியை இம்முறை வெற்றி கொள்வதற்கு, இலங்கை ரக்பி அணி மேலும் கடுமையான பயிற்சிகள் மற்றும் மூலோபாய திட்டங்கள் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். இந்த சுற்றுத் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு மாத காலம் இருக்கின்றமையினால், இலங்கை ரக்பி கால்பந்து ஒற்றியம் (SLRFU) மற்றும் இலங்கை பாடசாலை ரக்பி சங்கம் என்பவை இந்த தொடருக்கான பல மேலதிக செயற்பாடுகளையும் மேற்கொள்வது அணியை மேலும் பலப்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை.

கடந்தாண்டு இலங்கை இளையோர் அணியை இசிபதன கல்லூரியின் பழைய மாணவர் ஓமேல்கா குணரத்ன வழி நடத்தினார். அதேபோன்று 2014ஆம் ஆண்டு இலங்கையில் நடைப்பெற்ற போட்டிகளில் திரித்துவ கல்லூரியின் பழைய மாணவர் தரிந்து ரத்வத்த அணித்தலைவராக செயல்பட்டார்.  இவர்கள் இருவரும் தற்போது நடைபெற்று வரும் இலங்கை செவன்ஸ் அணியில் பிரதிநிதித்துவம் செய்து விளையாடுகின்றனர்.

நடைபெற இருக்கும் இந்த தொடர் குறித்து இலங்கை பாடசாலை ரக்பி சங்கத்தின் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த ஆண்டு, வீரர்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அணித்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. அதேநேரம் இம்முறை யார் இலங்கை இளையோர் அணியை வழிநடத்தப்போகிறார்கள் என்பது சற்று சுவாரஷ்யமாக இருக்கிறது. எனினும், கடந்தாண்டு ரக்பி போட்டிகளுக்காக வெளிநாடுகளில் சுற்று பயணங்களில் கலந்துகொண்ட றோயல் கல்லூரி அயேஷ் மதுரங்க மற்றும் திரித்துவ கல்லூரி அணித்தலைவர் ராஹுல் கருணாதிலக்க ஆகிய இருவரில் ஒருவர் இம்முறை அணித்தலைவராகலாம்” என தெரிவித்தனர்.

அனுபவ அடிப்படையில் நோக்காது பார்த்தால், இசிபதன கல்லூரியை சேர்ந்த குஷான் இந்துனில் கூட அணித்தலைவராக நியமிக்கப்படலாம்

எது எவ்வாறிருப்பினும் இம்முறை 19 வயதுகுப்பட்ட இளையோர் இலங்கை ரக்பி அணிக்கு ஆச்சரியப்படத்தக்க வகையில் சிறந்த திறமைகள் மற்றும் ரக்பி போட்டிகளுக்கு தேவையான வேகத்தையும் கொண்ட வீரர்கள் பலர் இணைந்திருக்கிறார்கள் என்பதை நடந்து முடிந்த பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டிகளில் காணக்கூடியதாக இருந்தது.Nilfer Ibrahim

இசிபதன கல்லூரிக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்து லீக் மற்றும் நோக் அவுட் கிண்ணப் போட்டிகளில் அவ்வணி வெல்ல வழிகாட்டிய நில்பெர் இப்ராஹிம் இலங்கை இளையோர் ரக்பி அணியை தயார் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு இளையோர் அணிக்கு பயிற்சியளித்த நில்பெர் அடுத்தடுத்து மூன்று முறை சம்பியனான இசிபதன கல்லூரிக்கு தொடர்ந்து பயிற்சியாளராக செயற்பட்டமை முக்கிய அம்சமாகும்.

பாடசாலை அணி லீக் போட்டிகளில் வெல்வதற்கு முக்கிய காரணமாய் இருந்த பயிற்சியாளர்கள் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியை வழிநடத்துகின்றமை புதிய கலாசாரத்தை உறுவாக்கும் ஒரு செயலாகக் கருதப்படுகின்றது என்பது இலங்கை பாடசாலை ரக்பி சங்க அதிகாரிகளின் கருத்தான இருக்கின்றது.

Asia Rugby U19 championships Schedule 2016

இலங்கை 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட செவன்ஸ் அணிகள் அண்மையில் முடிவடைந்த ஆசிய செவன்ஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, வென்று வரலாறு படைத்தது. எனினும், XV’ போட்டிகளை பொறுத்தவரை, செவன்ஸ் போட்டிகளை விட மிகவும் கடினமானது. அதனால், சரியான முன்னேற்பாடுகள் மற்றும் சரியான வீரர்கள் தெரிவு செய்வது போன்ற விடயங்கள் இலங்கை இளையோர் அணி கிண்ணத்தை வெல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும்.