பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி

175

பாகிஸ்தானுடனான நான்காவது ஒருநாள் போட்டியிலும் சவாலான வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தொடரை 3-0 எனக் கைப்பற்றியது.

டிரன்ட் பிரட்ஜில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 341 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜேசன் ரோயின் (114) சதத்துடன் ஸ்திரமான நிலையை எட்டியபோதும் அவர் ஆட்டமிழந்த பின் 15 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.

எனினும் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும், ஏழு ஓட்டங்களில் ரன் அவுட் ஒன்றில் இருந்து தப்பிய டொம் கர்ரன் 31 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி 3 பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டியது.

கச்சிதமான துடுப்பாட்ட ஆடுகளத்தில் பாகிஸ்தான் அணி மீண்டும் ஒருமுறை 300 ஓட்டங்களை கடந்ததோடு அந்த அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 340 ஓட்டங்களை எடுத்தது.

பாகிஸ்தானின் இமாலய ஓட்டங்களை அபாரமாக துரத்திய இங்கிலாந்து

கடந்த போட்டியில் சதம் பெற்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாமுல் ஹக் மணிக்கு 89 மைல் வேகத்தில் வீசிய மார்க் வூட்டின் பந்துக்கு முழங்கையில் பட்டு உபாதைக்கு உள்ளானார். இதனைத் தொடர்ந்து அரங்கு சென்ற அவர்ள் கடைசி நேரத்தில் களமிரங்கியதன் மூலம் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார்.  

எனினும் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடி பாபர் அஸாம் 115 ஓட்டங்களை பெற்றார். பாக்கர் சமான் (57) மற்றும் மொஹமட் ஹபீஸ் (59) அரைச்சதம் பெற்று பாகிஸ்தான் அணிக்கு வலுச் சேர்த்தனர்.

அணித்தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஜொன்னி பெயாஸ்டோ ஆகியோர் இல்லாத நிலையில் களமிறங்கியபோதும் இங்கிலாந்து அணி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கிண்ணத்திற்கு தனது தயார் நிலையை காட்டியது.

மந்தமான பந்துவீச்சு காரணமான ஒரு போட்டியில் இயன் மோர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணித்தலைவராக செயற்பட்டார்.

குறிப்பாக டிரென்ட் பிரட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து அணி இரு தடவை அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 481 ஓட்டங்களை பெற்றதோடு 2016 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 444 ஓட்டங்களை எடுத்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை (19) ஹெடிங்லியில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 340/7 (50) – பாபர் அஸாம் 115, மொஹமட் ஹபீஸ் 59, பாக்கர் சமான் 57, டொம் கர்ரன் 4/75

இங்கிலாந்து – 341/7 (49.3) – ஜேசன் ரோய் 114, பென் ஸ்டோக்ஸ் 71*, இமாத் வஸீம் 2/60, மொஹமட் ஹஸ்னைன் 2/80

முடிவு – இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<