கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி 18 வயதிற்குட்பட்ட றக்பி போட்டிகளில், றக்பி போட்டியின் முடிசூடா மன்னர்களாகிய இசிபதன கல்லூரியை 21-05 என்ற புள்ளி வித்தியாசத்தில் வென்றதன் மூலம் அகில இலங்கை 18 வயதிற்குட்பட்ட றக்பி போட்டிகளில் சாம்பியனானது.

கொழும்பு சி.ஆர். எண்ட் எப்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இசிபதன கல்லூரி முன்னைய சாம்பியனாக களமிறங்கியது. ஆரம்ப விசில் முதலே ஆதிக்கம் செலுத்திய கிங்ஸ்வூட் கல்லூரியானது இசிபதன கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்து அற்புதமாக விளையாடியது.

கிங்ஸ்வூட் கல்லூரி இப்போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டியில் முதலாம் பாதியின் இறுதி நேரம் வரை இரு அணிகளும் எந்த ஒரு புள்ளியும் பெறாத நிலையில் கிங்ஸ்வூட் கல்லூரியின் ஆர். ஏக்கநாயக்க கிங்ஸ்வூட் அணிக்காக முதலாவது ட்ரை வைத்து முதல் பாதியில் கிங்ஸ்வூட் அணியை முன்னிலைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய கிங்ஸ்வூட் கல்லூரி குறுகிய நேரத்தில் தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து முன்னிலையை அதிகரித்தது. கிங்ஸ்வூட் அணி சிறந்த முறையில் பாஸ் செய்து ராமநாயக்க மூலம் இரண்டாவது ட்ரை வைத்தது. தொடர்ந்து கிங்ஸ்வூட் அணியின் விங், சுபுன் செனவிரத்ன கம்பங்களுக்கு இடையில் ட்ரை வைத்து கிங்ஸ்வூட் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.

கிங்ஸ்வூட் அணி  21 புள்ளிகளைப் பெற்ற நிலையில் இசிபதன கல்லூரிக்கு வெற்றிக்கான வாய்ப்பு சிறிதும் இருக்கவில்லை. இறுதி நேரத்தில் இசிபதன கல்லூரியின் சமிந்த தமது அணிக்காக ஆறுதல் ட்ரை வைத்தார்.

கிங்ஸ்வூட் கல்லூரியானது அவர்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியது. இசிபதன கல்லூரியின் வேகத்தை சிறந்த முறையில் தடுத்து போட்டியை தன்வசப்படுத்தியது. றக்பி போட்டிகளின் முடி சூடா மன்னர்களாகிய இசிபதன கல்லூரியின் வெற்றி ஓட்டத்தை தடுத்து நிறுத்திய கிங்ஸ்வூட் அணி, நீண்ட காலத்தின் பின் மலையக அணி ஒன்று றக்பி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது.

ஆறு வருடங்களின் பின் கிங்ஸ்வூட் அணி பெற்ற அகில இலங்கை சாம்பியன் பட்டம் இதுவாகும். இறுதியாக 2010ஆம் ஆண்டு 16 வயதிற்குட்பட்ட றக்பி அணி அகில இலங்கை றக்பி சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.


குருநாகல மலியதேவ கல்லூரி ஷீல்ட் கிண்ணத்தை சுவீகரித்தது

மலியதேவ கல்லூரியானது, மொரட்டுவ மத்திய கல்லூரியுடனான  இறுதிப்போட்டியில் இலகுவாக வெற்றிபெற்று ஷீல்ட் கிண்ணத்தை சுவீகரித்தது. மொரட்டுவ மத்திய கல்லூரிக்கு சிறிதும் சந்தர்ப்பம் வழங்காது 44-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் மலியதேவ அணி வெற்றிபெற்றது.


கண்டி திரித்துவக் கல்லூரி போவ்ல் கிண்ணத்தை சுவீகரித்தது

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோணியர் கல்லூரியிடம் காலிறுதிப் போட்டியில் தோல்வியுற்றதன் பின்னர் பொவ்ல் கிண்ணத்திற்காக போட்டியிட்ட திரித்துவக் கல்லூரி, இறுதிப்போட்டியில் கண்டி வித்யார்த்த கல்லூரியை 41-07 என்று வென்றதன் மூலம் போவ்ல் கிண்ணத்தை சுவீகரித்தது.


புனித ஜோசப் கல்லூரி பிளேட் கிண்ணத்தை சுவீகரித்தது

நுகேகொட புனித ஜோன்ஸ் கல்லூரியுடனான இறுதிப் போட்டியில் 38-03 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டிய ஜோசப் கல்லூரி பிளேட் கிண்ணத்தை சுவீகரித்தது.

புனித ஜோன்ஸ் கல்லூரியே பெனால்டி மூலமாக முதலாவது புள்ளியைப் பெற்றாலும் ஜோசப் கல்லூரி அதிரடியாக விளையாடி போட்டியை வென்றது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்