அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானிற்குச் சென்று விளையாடாது என பிசிசிஐ இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி அந்த நாட்டுக்கு செல்ல இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது உறுதியாகி இருக்கிறது.
இதன்படி, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி ஆடும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இலங்கையில் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் முரண்பாடுகள் மற்றும் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றமான சூழல் காரணமாக, 2008ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதே சமயத்தில், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்கள் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவில்லை.
எவ்வாறாயினும், ஐசிசி மற்றும் ஆசியக் கிண்ணம் போன்ற முக்கிய போட்டித் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் பொதுவான நாடுகளில் விளையாடி வருகின்றது.
இந்த நிலையில், எட்டு அணிகள் பங்குபற்றும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நடைபெறுகின்ற திகதி மற்றும் போட்டிகள் நடைபெறும் மைதானம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்தது.
- சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான “Hybrid” மாதிரியை பாகிஸ்தான் மறுக்கின்றதா?
- ஆடவருக்கான 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு
- லங்கா T10 லீக்கில் வேறு இரண்டு புதிய அணிகள்
இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறும் எனவும் போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய 3 நகரங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கும் 3 போட்டிகளும் லாகூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்குமா என்ற கேள்வி எழுந்ததுடன், அந்த அணி பாகிஸ்தான் செல்ல மத்திய அரசு பிசிசிஐ-க்கு அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் வடிவத்தில் நடத்த ஐசிசி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் துபாய் அல்லது ஷார்ஜாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஐசிசி தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறியிருந்தார்.
மேலும், இந்தியா, பாகிஸ்தானுக்கு வராவிட்டாலும் இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நாங்கள் நடத்த மாட்டோம் எனவும் அவர் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். பாகிஸ்தானில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் வராதபோதும், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
எனவே, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அதன் பின் பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு வராது என சூசகமாக தெரிவித்தார்.
இதனிடையே, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணையை இறுதி செய்ய வேண்டிய இறுதி நாள் நவம்பர் 11ஆம் திகதி என்பதால் அதற்கு முன் பிசிசிஐ தங்களது முடிவை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இன்று (09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பிசிசிஐ சார்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, தற்போது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்றால் இந்திய அணி ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை. இல்லாவிட்டால், இந்திய அணிக்கு குறித்த தொடரில் இருந்து விலக நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு இந்திய அணி வர மறுத்தால் என்ன செய்வது? என்பது பற்றி சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள டுபாயில் இந்தியா ஆடும் போட்டிகளை நடத்த முதற்கட்டமாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறத்தில், இலங்கையும் இந்த திட்டத்தில் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
எது எவ்வாறாயினும், தற்போது இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என உறுதியாகி உள்ள நிலையில், ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது இலங்கையில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளும் எனக் கூறப்படுகிறது.
இதுஇவ்வாறிருக்க, ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தான் அணி தொடரையே புறக்கணிக்கும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார். இதனால் ஐசிசி தலையிட்டு பிசிசிஐ நிர்வாகத்தை சமாதானம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த ஒப்புக் கொள்ளுமா? ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<