இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான 5 போட்டிகள் இன்று இடம்பெற்றன. ராகம கிரிக்கெட் கழகம் மற்றும் செரசன்ஸ் விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றது.

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம்(14) தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய சங்கீத் குரே 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 189 ஓட்டங்களையும், கௌஷல்ய கஜசிங்க 99 ஓட்டங்களையும் குவிக்க செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 401 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கௌஷல்ய கஜசிங்க மற்றும் சங்கீத் குரே ஐந்தாவது விக்கெட்டுக்காக 245 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் அமில அபொன்சோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய ராகம விளையாட்டுக் கழக வீரர்களும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உதார ஜயசுந்தர சதம் கடந்த நிலையில் 109 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், சதத்தை தவறவிட்ட ரொஷேன் சில்வா மற்றும் சமீர டி சொய்சா முறையே 95 மற்றும் 91 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

அவர்களை தவிர சதுர பீரிஸ் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சுராஜ் ரந்திவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதன்படி ராகம விளையாட்டுக் கழகம் 448 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது.

சொற்ப நேரமே எஞ்சியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த செரசன்ஸ் விளையாட்டுக்கு கழகம் போட்டி நிறுத்தப்படும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 5 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 401 (98.3) – சங்கீத் குரே 189, கௌஷல்ய கஜசிங்க 99, அமில அபொன்சோ 4/100

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 448 (141) – உதார ஜயசுந்தர 109, ரொஷேன் சில்வா 95, சமீர டி சொய்சா 91, சதுர பீரிஸ் 71, சுராஞ் ரந்திவ் 4/119, மொஹமட் டில்ஷாட் 3/48

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 5/0 (2)

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

நேற்றைய தினம் ஆட்டம் நிறுத்தப்படும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களை பெற்றிருந்த தமிழ் யூனியன் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 450 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அபாரமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட தரங்க பரணவிதான மற்றும் ஜீவன் மெண்டிஸ் முறையே 100 மற்றும் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். மனோஜ் சரத்சந்திர 87 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார், பந்துவீச்சில் அசத்திய மலிந்த புஷ்பகுமார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பில் ஷெஹான் ஜயசூரிய மற்றும் திக்ஷில டி சில்வா தவிர மற்றைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில், அவ்வணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜயசூரிய மற்றும் டி சில்வா 59 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ஜீவன் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி 231 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இம்முறை முன்னேற்றகரமான  ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களை பெற்றிருந்தது. அஷென் சில்வா ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 450 (91) – தரங்க பரணவிதான 100,  ஜீவன் மெண்டிஸ் 115, மனோஜ் சரத்சந்திர 87, மலிந்த புஷ்பகுமார 5/134

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 219 (42.1) – ஷெஹான் ஜயசூரிய 59, திக்ஷில டி சில்வா 59, ஜீவன் மெண்டிஸ் 4/79

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 137/1 (34) – ஷெஹான் ஜயசூரிய 67, அஷென் சில்வா 47*


NCC எதிர் SSC

நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களை பெற்றிருந்த NCC அணியின் கீழ்வரிசை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை 393 ஆக அதிகரித்தனர்.

அடுத்து களமிறங்கிய SSC அணியின் தனுஷ்க குணதிலக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை விளாசிய போதிலும், ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறியதால் அவ்வணி 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் அசத்திய NCC அணியின் சதுரங்க டி சில்வா 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அடுத்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய NCC அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் விக்கெட் இழப்பேதுமின்றி 27 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 393 (107.3) – சதுரங்க டி சில்வா 95, ஜெஹான் முபாரக் 81, பர்வீஸ் மஹ்ரூப் 59, நிமேஷ குணசிங்க 47, கசுன் மதுஷங்க 3/65

SSC (முதல் இன்னிங்ஸ்) – 219 (60) – தனுஷ்க குணதிலக 112*, சதுரங்க டி சில்வா 6/72

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 27/0 (8)


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

நேற்றைய தினம் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை பெற்றிருந்த சோனகர் கழகம், கீழ்வரிசை வீரர்களின் சிறப்பான பங்களிப்புடன் 376 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அசத்தலாக துடுப்பெடுத்தாடிய ஷானுக விதானவசம் 20 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 181 ஓட்டங்கள் விளாசினார். பந்து வீச்சில் சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்ன 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தனித்து போராடிய மஞ்சுல டி சொய்சா 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய நிலங்க சந்தகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 376 (97.5) – ஷானுக விதானவசம் 181*, ருவிந்து குணசேகர 45, பபசர வடுகே 40, அசேல குணரத்ன 3/50, சீ்குகே பிரசன்ன 3/124

இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 242 (79) – மஞ்சுல டி சொய்சா 90, நிலங்க சந்தகன் 5/69


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களை பெற்றிருந்த கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற 249 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

இளம் வீரர் வனிது ஹசரங்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது சதம் விளாச, கொழும்பு கிரிக்கெட் கழகம் 384 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவரை தவிர, அஷான் ப்ரியஞ்சன் 81 ஓட்டங்களையும் கீழ்வரிசை வீரர் லஹிரு மதுஷங்க 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அகில தனஞ்சய 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து தனது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் விக்கெட் இழப்பேதுமின்றி 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 276 (81.4) – ஹஷான் துமிந்து 105, அகில தனஞ்சய 42*, சச்சித் பதிரன 3/37, லஹிரு மதுஷங்க 3/45, லக்ஷன் சந்தகன் 3/63

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 384 (79.4) – வனிது ஹசரங்க 116*, அஷான் ப்ரியஞ்சன் 81, லஹிரு மதுஷங்க 59, ரொன் சந்திரகுப்த 58, அகில தனஞ்சய 4/119

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/0 (8)