சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான “Hybrid” மாதிரியை பாகிஸ்தான் மறுக்கின்றதா?

49

சம்பியன்ஸ் கிண்ணத்தினை இரண்டு நாடுகளில் நடாத்துவதற்கான “Hybrid” மாதிரியை ஏற்க தயாராக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவராக காணப்படும் மொஹ்சின் நக்வி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை 

மொத்தம் 8 நாடுகள் பங்கெடுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட தொடரில் இந்தியா பங்கெடுக்க பாகிஸ்தான் பயணமாகாது எனக் கூறப்பட்டுள்ளதோடு இதற்காக தொடரை இரண்டு நாடுகளில் நடாத்துவதற்கான “Hybrid” மாதிரி ICC மூலம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே இந்த “Hybrid” மாதிரியை ஏற்கும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இல்லை என மொஹ்சின் நக்வி கூறியிருக்கின்றார்.

அத்துடன் பாகிஸ்தான் கடந்த காலங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு ஆதரவாக செயற்பட்ட விடயங்களை மொஹ்சின் நக்வி சுட்டிக்காட்டி உள்ளதோடு, தமக்கு சம்பியன்ஸ் கிண்ணத்தில் அவர்கள் ஒத்துழைக்காத சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் அவ்வாறு ஒத்துழைப்பினை எதிர்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் இந்திய பங்கெடுக்காத நிலையில், தொடர் “Hybrid” மாதிரி மூலம் இலங்கை – பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடாத்தப்பட்டதோடு, 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தான் இந்தியா சென்று அதில் பங்கேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

2025ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதி தொடக்கம் மார்ச் 09ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<