மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அபார வெற்றியை பதிவுசெய்த இந்தியா

71
©Associated Press

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்திருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 318 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, குறித்த சுற்றுப் பயணத்தில் மேற்கிந்திய தீவுகளுடன் T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடிய பின்னர், மீண்டும் மேற்கிந்திய தீவுகளுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகின்றது. 

ஸ்டோக்ஸின் சாகசத்தால் இங்கிலாந்துக்கு த்ரில் வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் ……

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி என்டிகுவா நகரில் கடந்த வியாழக்கிழமை (22) ஆரம்பமாகியிருந்தது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார். 

இந்திய அணி, தமது சுற்றுப் பயணத்தின் போது நடைபெற்ற T20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய இரண்டினையும் கைப்பற்றியிருந்த காரணத்தினால் இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தது. 

இந்திய அணிக்கு அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைச்சதங்களை பெற்றுக் கொடுத்தனர். இந்த இரண்டு வீரர்களினதும் அரைச்சதங்களோடு இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 96.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 297 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அஜிங்கியா ரஹானே 81 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 58 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். 

அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பாக கேமர் ரோச் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஷனோன் கேப்ரியல் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

இதன் பின்னர் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 74.2 ஓவர்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை மட்டுமே தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது. அவ்வணியின் துடுப்பாட்டம் சார்பாக ரொஸ்டன் சேஸ் 48 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.  

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப் பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா வெறும் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு மொஹமட் சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.  

தொடர்ந்து, 75 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி 343 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நிறுத்தியது. 

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் சார்பில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸிலும் அரைச்சதம் பெற்றிருந்த அஜிங்கியா ரஹானே இம்முறை அவரின் 10ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து 102 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், ஹனுமா விஹாரி 93 ஓட்டங்களை பெற்றிருக்க, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 51 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சு சார்பில், ரொஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுக்களையும், ஜேசன் ஹோல்டர், கேமர்ரோச் மற்றும் ஷன்னோன் கேப்ரியல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர். 

நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து …….

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 419 ஓட்டங்களை நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணியானது 26.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து வெறும் 100 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது. 

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதன் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் மிகக் குறைவான ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க, பின்வரிசையில் வந்த கேமர்  ரோச் மட்டும் 38 ஓட்டங்களை தாண்டி மேற்கிந்திய தீவுகள் அணியில் இருபது ஓட்டங்களுக்கு மேல் கடந்த ஒரேயொரு துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார். 

மேற்கிந்திய தீவுகள் அணியினை குறைவான ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த காரணமான இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா தனது வேகத்தின் மூலம் வெறும் 7 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்து மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார். இதேநேரம், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் மொஹமட் சமி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தனர். 

மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ……

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இந்திய அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்காக 60 புள்ளிகளை பெற்றுக் கொள்கின்றது. 

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த ஆரம்பத்தை காட்டியிருக்கும் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) ஜமெய்க்கா நகரில் ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம் 

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 297 (96.4) அஜிங்கியா ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58, லோக்கேஷ் ராகுல் 44, கேமர் ரோச் 66/4, ஷன்னோன் கேப்ரியல் 71/3

மேற்கிந்திய தீவுகள் (முதல் இன்னிங்ஸ்) – 222 (74.2) ரொஸ்டன் சேஸ் 48, ஜேசன் ஹோல்டர் 39, இஷாந்த் சர்மா 43/5, மொஹமட் சமி 48/2, ரவீந்திர ஜடேஜா 64/2

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 343/7 (112.3) அஜிங்கியா ரஹானே 102, ஹனுமா விஹாரி 93, விராட் கோலி 51, ரொஸ்டன் சேஸ் 132/4

மேற்கிந்திய தீவுகள் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 100 (26.5) கேமர் ரோச் 38, ஜஸ்பிரிட் பும்ரா 7/5, இஷாந்த் சர்மா 31/3

முடிவு – இந்திய அணி 318 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<