மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

3388
 

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று (24) அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற லசித் மாலிங்க தொடர்ந்தும் இலங்கை T20 அணியின் தலைவராக செயற்படவுள்ளார். இறுதியாக, தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற T20 தொடரில், இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்பட்டிருந்தார்.

டி-20 அணியிலிருந்து மெதிவ்ஸ் நீக்கம்: மறுக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர்

நியூசிலாந்து அணிக்கெதிராக எதிர்வரும்…

இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் T20 குழாத்தில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் அஞ்செலோ மெதிவ்ஸ், T20 குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், கடந்த காலங்களாக பிரகாசிக்கத் தவறி வரும் திசர பெரேராவும்  அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்குறித்த இருவருடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20  குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த, சதீர சமரவிக்ரம, அஞ்செலோ பெரேரா, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், ப்ரியமல் பெரேரா, சுரங்க லக்மால், அசித பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உள்ளூரில் நடைபெற்று வரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வரும், சகலதுறை வீரர்களான ஷெஹான் ஜயசூரிய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் T20 குழாத்துக்குள் இடம்பிடித்துள்ளனர்.

இவர்களுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 தொடரில் உபாதை காரணமாக இணைக்கப்படாத, குசல் ஜனித் பெரேரா, லஹிரு குமார, தனுஷ்க குணதிலக்க மற்றும் கசுன் ராஜித ஆகியோருடன், மித வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர்களான தசுன் ஷானக மற்றும் லஹிரு மதுங்க ஆகியோர் T20 குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முறையற்ற பந்துவீச்சு பாணி காரணமாக ஐசிசின் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் அகில தனன்ஜய இந்த குழாத்தில் சுழல் பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளதுடன், அவருடன் இணைந்து லக்ஷான் சந்தகனும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி, ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு: வில்லியம்சன் இல்லை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…

இலங்கை T20 குழாம்

லசித் மாலிங்க (தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக,  வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார, லஹிரு மதுஷங்க

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<