கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்?

2833
Graham Ford and Sangakkara

ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பின்னர் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களாக மாறிய விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே கிரிக்கெட் உலகில் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் பயிற்றுவிப்பாளர்களாக உருவெடுத்த இரு கிரிக்கெட் வீரர்களில் டேரன் லீமன் மற்றும் ஜெஃப் மார்ஷ் காணப்படுகின்றனர். அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜெஃப் மார்ஷை எவ்விதமான பாரபட்சமின்றி 2012ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையானது பணிநீக்கம் செய்திருந்தது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டி இருந்தமையே இதற்கான காரணமாக கூறப்பட்டது. எனினும் இதை ஏற்காத ஜெஃப் மார்ஷ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் அதில் வெற்றி பெற்றதனால், இலங்கை கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய இழப்பீடு ஒன்றை வழங்க நேரிட்டது.

அதேபோன்று முன்னாள் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய சந்திக்க ஹத்துருசிங்கவையும் அப்பதவியிலிருந்து தூக்கி எறிந்திருந்தது. அதிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபையின் நன்மதிப்புகள் குறைத்திருந்தது. இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஸ்டீவ் ரிக்ஸ்ன் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தார். எனினும், முன்னாள் அவுஸ்திரேலிய  விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான  ஸ்டீவ் ரிக்ஸ்ன் இலங்கை கிரிக்கெட் சபை தொழில்முறை நிபுணத்துவ மட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக குறை கூறியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபை எனக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை அனுப்பியது, உண்மையில் அது மிகவும் சங்கடமாக இருந்தது, ஏனினில் மிகவும் மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது, என்று ஸ்டீவ் ரிக்ஸ்ன் குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து 2015ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற எந்தவொரு பயிற்றுவிப்பாளரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்ற முன்வரவில்லை. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையானது, முன்னாள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரான கிரஹாம் போர்ட்டை  இலக்கு வைத்தது. 2012ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியிருந்த கிரஹாம் போர்ட் குறித்த ஒப்பந்தத்தின் முடிவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையினால் மீண்டுமொருமுறை வழங்கப்பட்ட வாய்ப்பினை நிராகரித்திருந்தார்.

தற்போது குமார் சங்கக்கார விளையாடி வரும் இங்கிலாந்து உள்ளூர் கழகமான சர்ரே அணியில் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்ட கிரஹாம் போர்ட் அவ்வணியை டிவிஷன் 1 இற்கு தரமுயர்த்த தனது அயராத பங்களிப்பை வழங்கியிருந்த அதேநேரம் குறித்த பதவியில் முழு திருப்தியுடன் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் எப்படியாவது இலங்கை பயிற்றுவிப்பாளராக கிரஹாம் போர்ட்டை இணைத்துவிட வேண்டும் என்று எண்ணிய இலங்கை கிரிக்கெட் சபை முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவை நாடியது. ஏனெனில்,  கிரஹாம் போர்ட் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரிடையே சிறந்த நட்பு ரீதியிலான உறவொன்று இருந்தது. இடது கை துடுப்பாட்ட வீரரான சங்கக்கார தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த  கிரஹாம் போர்ட்டின் பரந்த அறிவு, உண்மை மற்றும் அவரது அயராத உழைப்புக்கு பெரிதும் மதிப்பளித்திருந்தார். அது மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சராசரியாக 36 ஓட்டங்கள் மற்றும் 12 சதங்களை மாத்திரமே பதிவு செய்திருந்த குமார் சங்கக்கார கிரஹாம் போர்ட்டின் வருகைக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளின் சராசரி 55 இற்கும் மேல் உயர்ந்ததோடு மேலும் 13 சதங்களை விளாசியிருந்தார். அத்துடன், இலங்கை அணி சார்பாக ஒருநாள் போட்டி வரலாற்றில் கிரிக்கெட் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட சிறந்த சராசரியாக, சங்கக்கராவின் சராசரி (41.98) அமைந்தது.

2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 169 ஓட்டங்களை பதிவு செய்த குமார் சங்கக்கார, ”தனது வெற்றிகரமான துடுப்பாட்டத்துக்கு கிரஹாம் போர்ட்டின் சிறந்த பயிற்சிகளே காரணமாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். மிகவும் வற்புறுத்தி கடுமையான பயிற்சிகள் வழங்கினார். ரிவர்ஸ் ஸ்வீப் (Reverse sweep) மற்றும் படல் ஸ்வீப் (Padal Sweep) முறைகளை மிகவும் நுணுக்கமான முறையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை பயிற்சிகளின் போது அற்புதமாக விளக்கி பல புதிய நுணுக்கங்களை எங்களுடைய துடுப்பாட்ட பாணியில் புகுத்தினார் என்று சங்கக்கார மேலும்  தெரிவித்திருந்தார்.”

அதேநேரம், 2015ஆம் ஆண்டு சர்ரே அணிக்கு குமார் சங்கக்காரவை வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யுமாறு பரிந்துரை செய்திருந்தார். இந்த சிறந்த உறவு முறைகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக கிரஹாம் போர்ட்டிடம் பேசுமாறு இலங்கை கிரிக்கெட் சபை குமார் சங்கக்காரவை வேண்டியிருந்தது. முதலில் தயக்கம் காட்டிய சங்கக்கார இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட பல உறுதி மொழிகளுக்கு பின்னர் இது குறித்து கிரஹாம் போர்ட்டிடம் பேசுவதாக ஒத்துக்கொண்டார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் உறுதி மொழிகளை நம்பிய குமார் சங்கக்கார கிரஹாம் போர்ட்டிடம் தன்னுடைய இறுதி தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டினார். எனினும், நிலையில்லாத கொள்கைகளையுடைய இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைவதற்கு கிரஹாம் போர்ட் தயக்கம் காட்டியிருந்தார். மேலும் பல்வேறு முறைகளில் கிரஹாம் போர்ட்டை சமாதானப்படுத்திய சங்கக்கார இலங்கை கிரிக்கெட் சபை வழங்கிய உறுதி மொழிகளைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகள் வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

சங்கக்காரவுடனான நீண்ட கலந்துரையாடல் மற்றும் சிறந்த உறவு முறை காரணமாக கொழும்புக்கு வர கிரஹாம் போர்ட் ஒப்புதல் அளித்தார். அதேநேரம், அவரை பெரிதும் எதிர்பார்த்திருந்த சர்ரே கிரிக்கெட் கழகத்தின் பணிப்பாளர் அலெக் ஸ்டூவர்ட் குறித்த தீர்மானம் தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், கிரஹாம் போர்ட் தலைமை பயிற்றுவிப்பாளராக மட்டும்மல்ல கடந்த இரண்டு வருடங்களில் எங்களுடைய கிரிக்கெட் தரத்தை உயர்த்துவதற்கு பல வழிகளில் பங்களிப்பு செய்திருந்தார் என்று மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.  

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தந்த கிரஹாம் போர்ட் இலங்கை அணியை மீண்டும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.  அந்த வகையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கை 3-0 என்ற கணக்கில் வெற்றியீட்டி அவுஸ்திரேலிய அணியை வைட்வாஷ் செய்தது. எனினும், காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய அஞ்சலோ மெதிவ்ஸ், லசித் மலிங்க மற்றும் தினேஷ் சந்திமாலின் இழப்பினுடாக தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது 3-0 கணக்கில் டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரையும் இழந்து பெரும் பின்னடைவை இலங்கை அணி கண்டது. அதுமட்டுமல்ல முதல் தடவையாக பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

எனினும், சற்றும் தளர்வடையாத கிரஹாம் போர்ட் இலங்கை அணியை மீண்டும் வல்லமை மிக்க அணியாக மாற்ற முடியும் என்று நம்பினார். அறிக்கைகளின்படி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப போட்டியில் அஞ்சலோ மெதிவ்ஸ் களமிறங்க கூடிய நிலை காணப்பட்டது. எனினும், கொழும்பிலிருந்து வந்த ஆணைப்படி அஞ்சலோ மெதிவ்ஸ் முதல் போட்டியில் கழட்டிவிடப்பட்டமை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், ஏற்கனவே உடற்தகுதி பரிசோதனைகளிலிருந்து அஞ்சலோ மெதிவ்ஸ் சிறந்த நிலையிலிருப்பதாக வைத்தியர்களினால் சான்றளிக்கப்பட்டிருந்தது. உடற்தகுதிக்காக பரிசோதனைக்கு அஞ்சலோ மெதிவ்ஸ் ஒத்துழைப்பதாக கூறிய போதிலும் கொழும்பிலிருந்து தடைவிதிக்கப்பட்டது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மோசமான முறையில் விளையாட வேண்டுமென்பதே அதிகாரிகளின் தேவையாக இருந்தது. அதன் மூலம் தலைமை பயிற்றுவிப்பாளரை மாற்றக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்தது.

அத்துடன், மந்த கதியில் ஓவர்களை வீசியதன்  காரணமாக தற்காலிக அணித் தலைவர் உபுல் தரங்க இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமை பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட்டை குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் கிரஹாம் போர்ட் எதிர்கொண்ட தடைகளை உணர்ந்து கொண்ட  சங்கக்கார கிரஹாம் போர்ட்டுக்கு ஆதரவு கொடுத்தார்.

கிரஹாம் போர்ட் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு உலகில் தலை சிறந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார். திறமையுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு சரியான பயிற்றுவிப்பாளர் கிடைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முடிந்த திறமைகளை வெளிப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயிற்றுவிப்பாளர் இருப்பது பயிற்சி அளிப்பதற்கு, கிரிக்கெட் வீரர்கள் இருப்பது கிரிக்கெட் விளையாடுவதற்கு என்றும் அவர்களுக்கு தடையின்றி விளையாட வாய்ப்புக் கொடுத்து, அவர்கள் வெளிப்படுத்தும் திறமைகளுக்கு அவர்களே பொறுப்பு என்றால் நிச்சயமாக திறமைகளை இளம் வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிரிக்கெட் முகாமையாளர் என்ற பதவிக்கு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டதோடு தலைமை பயிற்றுவிப்பாளரின் சில அதிகாரங்கள் அசங்க குருசிங்கவுக்கு பிரித்து வழங்கப்பட்டமையானது கிரஹாம் போர்ட்டின் பணிகளுக்கு இடையூறாக அமைத்திருந்தது.

இந்நிலையில், உத்தியோகபூர்வ அதிகாரிகளை சந்தித்த கிரஹாம் போர்ட் இந்நிலைமை குறித்து விளக்கியதோடு, முழுமையான பொறுப்புகளை வழங்குவதில் சிக்கல் இருந்தால் அணியின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்படலாம் என தனது கருத்தை தெரிவித்தார்.

இதற்கு இலங்கை கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்து தங்களது கட்டளைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை மேற்கொள்ளுமாறும் அவ்வாறில்லையெனில் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகலாம் எனத் தெரிவித்தது.

குறித்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் கிரஹாம் போர்ட் பரிதாபமாக இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.