மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுத்த இந்தியா

136
Image courtesy : BCCI Twitter

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இரு சதங்கள், ஒரு ஹெட்ரிக் விக்கெட்டுடன் இந்திய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (18) விசாகப்பட்டினம் வை.எஸ் ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டியிலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இந்திய அணியில் சிவம் துபே நீக்கப்பட்டு சர்துல் தாகூர் அழைக்கப்பட்டார். 

மேற்கிந்திய தீவுகள் அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. சுனில் அம்பிரிஸ், ஹெய்டன் வோல்ஷ் ஆகியோர் நீக்கப்பட்டு எவின் லுவிஸ், கெரி பியர் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர். இதில் கெரி பியர் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்பம் இன்றைய போட்டியில் சிறப்பாக அமைந்தது. ரோஹித் சர்மா – கே.எல் ராகுல் ஜோடியின் இணைப்பாட்டம் இந்திய அணிக்கு மிகவும் பெறுமதியாக அமைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இருவரும் சதம் கடக்க இணைப்பாட்டம் 200 ஓட்டங்களை தாண்டியது. 

3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்து 102 ஓட்டங்களுடன் கே.எல் ராகுல் ஆட்டமிழக்க, முதல் விக்கெட் இணைப்பாட்டம் 227 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்துவந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி இன்றைய போட்டியிலும் பிரகாசிக்கத் தவறினார். முதல் பந்திலேயே ஓட்டமெதுவுமின்றி அரங்கம் திரும்பினார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அசத்திவந்த ஹிட்மேன் எனப்படும் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள், 17 பௌண்டரிகளுடன் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 28ஆவது சதத்தை பூர்த்தி செய்ததுடன் 138 பந்துகளில் 159 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் ஐந்தாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 39 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

ரிஷப் பண்டை தொடர்ந்து அடுத்த ஓவரில் அதிரடியாக அரைச்சதம் கடந்த ஷிரேயஸ் ஐயர் 4 சிக்ஸர்கள், 3 பௌண்டரிகளுடன் 53 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ஓட்டங்களை குவித்தது. கேதார் யாதவ் 16 ஓட்டங்களுடனும், ரவீந்திர ஜடேஜா ஓட்டமெதுவுமின்றி ஆடுகளத்தில் இருந்தனர். 

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஷெல்டன் கொட்ரெல் 83 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், கிரண் பொல்லார்ட், கிமோ போல் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 388 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்தது. 

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 61 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் எவின் லுவிஸ் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து வந்த கடந்த போட்டியில் சதமடித்த ஷிம்ரொன் ஹெட்மயர் எதிர்பாராத விதமாக 4 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த ரொஸ்டன் ச்சேஸ் வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவுகள் அணி மோசமான நிலைக்கு சென்றது. 

இந்நிலையில் 4ஆவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப்புடன் நிக்கொலஸ் பூரண் இணைந்தார். இருவரும் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இணைப்பாட்டமாக 106 ஓட்டங்கள் பகிரப்பட்டது. அதிரடியாக ஆடிய நிக்கொலஸ் பூரண் 6 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் ஒருநாள் சர்வதேச அரங்கில் தனது 4ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்து 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அணித்தலைவர் கிரண் பொல்லார்ட் வந்த வேகத்திலேயே முதல் பந்தில் அரங்கம் திரும்பினார். 

அதனை தொடர்ந்து மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த கடந்த போட்டியில் சதமடித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் அரைச்சதம் கடந்து 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டர் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 33ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய ஹெட்ரிக் பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேச அரங்கில் குல்தீப் யாதவ் தனது இரண்டாவது ஹெட்ரிக் சாதனையை பதிவு செய்தார். 

ஹெட்ரிக்கை தொடர்ந்து போட்டியின் வெற்றி இந்திய அணியின் பக்கம் சென்றது. ஆனால் 9ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டாலும், இந்திய அணியின் இமாலய ஓட்ட எண்ணிக்கையை மேற்கிந்திய தீவுகள் அணியால் எட்ட முடியவில்லை. இறுதில் 43.3 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன் மூலம் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி மற்றும் ஹெட்ரிக்குடன் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுக்களையும், சர்துல் தாகூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணியின் இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது. 

இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் 159 ஓட்டங்களை விளாசிய ரோஹித் சர்மா தெரிவானார். ஒருநாள் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) கட்டக்கில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 387/5 (50) – ரோஹித் சர்மா 159(138), கே.எல் ராகுல் 102(104), ஷெல்டன் கொட்ரெல் 2/83 (9), கிரண் பொல்லார்ட் 1/20 (2)

மேற்கிந்திய தீவுகள் – 280 (43.3) – ஷை ஹோப் 78(85), நிக்கொலஸ் பூரண் 75 (47), மொஹமட் ஷமி 3/39 (7.3), குல்தீப் யாதவ் 3/52 (10)

முடிவு – இந்திய அணி 107 ஓட்டங்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<