முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கை சம்பியன்

79

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்திருக்கும் முத்தரப்பு இளையோர் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இங்கிலாந்து இளையோர் அணியை 77 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.  

இலங்கை இளையோர் அணிக்கு அடுத்த தோல்வி

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும்….

இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்குபெறும் இந்த இளையோர் முத்தரப்பு ஒருநாள் தொடர் டிசம்பர் மாத முதல் வாரம்  என்டிகுவா நகரில் ஆரம்பமாகிய நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் தலா ஆறு குழுநிலைப் போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளைப் பதிவு செய்த இங்கிலாந்தின் இளையோர் அணியும், 3 வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கையின் இளையோர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

இதனை அடுத்து நேற்று (21) கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கையின் இளம் வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தேர்வு செய்தனர்.  

அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை இளையோர் கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த நவோத் பரணவிதான மற்றும் கமில் மிஷார ஆகியோர் அட்டகாசமான ஆரம்பத்தை வழங்கினர். இதில், நவோத் பரணவிதான சதம் பெற கமில் மிஷார அரைச்சதத்துடன் தனது தரப்பை வலுப்டுத்தியிருந்தார்.   

பின்னர் இந்த துடுப்பாட்ட வீரர்களின் உதவியோடு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 265 ஓட்டங்கள் குவித்தது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற்ற நவோத் பரணவிதான 119 பந்துகளுக்கு 16 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் குவித்தார். அதேநேரம், கமில் மிஷார 69 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோர்ஜ் பால்டர்சன் 4 விக்கெட்டுக்கள் சாய்க்க, பிளேக் குல்லேன் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 266 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 77 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.  

பானிபூரி விற்று ஐ.பி.எல் மூலம் கோடீஸ்வரனான 17 வயது இளைஞன்

மும்பையை சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி….

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஜோர்டன் கோக்ஸ் போராட்டம் காட்டி 77 ஓட்டங்கள் குவித்திருந்தார். அதேநேரம், இலங்கைத் தரப்பின் பந்துவீச்சில் கவிந்து நதீஷன் 3 விக்கெட்டுக்களையும் அஷைன் டேனியல், சுதீர திலகரட்ன மற்றும் நவோத் பராணவிதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்ததோடு முத்தரப்பு ஒருநாள் தொடரின் சம்பியன்களாக இலங்கை மாறவும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 265/9 (50) நவோத் பரணவிதான 108 (119), காமில் மிஷார 69 (84), ஜோர்ஜ் பால்டர்சன் 55/4(8), பிளேக் குல்லன் 43/3(8)

இங்கிலாந்து – 188 (43.1) ஜோர்டன் கோக்ஸ் 77(102), கவிந்து நதீஷன் 43/3(8.1), அஷைன் டேனியல் 26/2(7), சுதீர திலகரட்ன 31/2(8), நவோத் பரணவிதான 45/2(10)

முடிவு – இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி 77 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<