20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்காக மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்ரேலியா அணியை தங்களது கடைசி லீக் போட்டியில் நேற்று மொஹாலி பிண்டரா விளையாட்டு மைதானத்தில் சந்தித்தது.

இவ்விரு அணிகளும் தலா 2 வெற்றிகள், ஒரு தோல்வி என்று 4 புள்ளிகளுடன் சமநிலை வகிப்பதால் இதில் வாகை சூடும் அணி குழு இரண்டில் இருந்து 2ஆவது அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்க, தோற்கும் அணி உலகக் கிண்ணத் தொடரை விட்டு வெளியேறும் என்ற நிலையில் போட்டி நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மைதான சூழ்நிலைக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

நேற்றைய போட்டியில் விளையாடிய அணிகளின் விபரம்,

இந்திய அணி :

ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராட் கொஹ்லி , சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், மஹேந்திர சிங் டோனி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின், அசிஷ் நெஹ்ரா,ஜஸ்ப்ரிட் பும்ரா.

அவுஸ்ரேலியா அணி:

உஸ்மான் கவாஜா, அரொன் பிஞ்ச், டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித் , க்லென் மெக்ஸ்வெல், ஷேன் வொட்சன், ஜேம்ஸ் பால்க்னர், பீட்டர் நெவில், ஆடம் ஜம்பா, நதன் கோல்ட்டர் நைல், ஜோஷ் ஹசில்வுட்.

நடுவர்கள்மறையிஸ் எரஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேன

இதற்கிணங்க அவுஸ்ரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் அரொன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினார்கள். கவாஜா ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2ஆவது ஓவரில் நான்கு பவுண்டரிகள் அடித்தார். அஸ்வின் வீசிய 4ஆவது ஓவரில் பிஞ்ச் 2 சிக்ஸர்களை அடிக்க அவுஸ்ரேலியா அணியின் ஓட்டங்கள் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதன் மூலம் அவுஸ்ரேலியா அணி 4 ஓவர்களில் 50 ஓட்டங்களைத் தொட்டது.

5ஆவது ஓவரில் நெஹ்ரா வீசிய பந்தில் அதிரடியாக விளையாடி வந்த கவாஜா 26 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தியதோடு குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கட்டுகளையும் சாய்த்தார்கள். இதன் படி வோர்னரை 6 ஓட்டங்களோடு அஸ்வின் விழ்த்த அவுஸ்ரேலியா அணியின் தலைவைர் ஸ்டீவ் ஸ்மித்தை 2 ஓட்டங்களோடு யுவராஜ் வீழ்த்த அவுஸ்ரேலியா தடுமாற ஆரம்பித்தது.

பிஞ்ச் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினார்கள். ஆனால் பிஞ்ச் 43 ஓட்டங்களோடு பாண்டியாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த மெக்ஸ்வெல் 31 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பும்ரா வீசிய பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

இறுதியில் அவுஸ்ரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சில் அற்புதமாகப் பந்து வீசிய நெஹ்ரா 4 ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டை வீழ்த்த, பாண்டியா இரண்டு விக்கட்டுகளையும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினார்கள்.

இதன் பின் 120 பந்துகளில் 161 ஓட்டங்களைப் பெற்றால் அரையிறுதிக்கு தெரிவாகலாம் என்ற வெற்றி  இலக்குடன்  இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஜோடி களம் புகுந்தது. ஆனால் அவர்களால் நல்லதோர் ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ரோஹித் சர்மா 12 ஓட்டங்களோடும் தவான் 13 ஓட்டங்களோடும் ஆட்டம் இழந்து பெரும் எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். இவர்களை அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 10 ஓட்டங்களோடு  தனது விக்கட்டைப் பறிகொடுக்க இந்திய அணி 7.4 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்து  தடுமாறியது.

பின்னர் விராட் கொஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4ஆவது விக்கட்டுக்காக  45 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் யுவராஜ் சிங் 21 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.  இறுதியில் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை காணப்பட்டது. அந்த வேளையில் போட்டி அவுஸ்ரேலியா அணிக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் ஜேம்ஸ் பால்க்னர் வீசிய 18ஆவது ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது. அந்த ஓவரில் விராட் கொஹ்லி  2 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாசினார்.

அதன் பின் 19ஆவது ஓவரில் மீண்டும் மிரட்டிய கொஹ்லி அந்த ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் கடைசி 6 பந்துகளில் வெறுமனே 4 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை 18ஆவது ஓவரில் 19 ஓட்டங்களை வாரி வழங்கிய ஜேம்ஸ் பால்க்னர் வீச இறுதி ஓவரின் முதல் பந்திலேயே  தலைவர் டோனி பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை எட்டினார்.

இதன் மூலம் இந்திய அணி 6 விக்கட்டுகளால் அவுஸ்ரேலியா அணியை தோற்கடித்தது. அதிரடியாக விளாடிய விராட் கொஹ்லி 51 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக   82  ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற மறுமுனையில் டோனி 10 பந்துகளில் 18 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்று இருந்தனர்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கொஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

.சி.சி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில்  இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்வரும் 31ஆம் திகதி சந்திக்கிறது.