மலிந்து மதுரங்கவின் அபார துடுப்பாட்டத்தினால் மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

688
SInger U19 Schools Cricket

புனித அலோசியஸ் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

சிங்கர் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில், காலிறுதிக்கு தகுதி பெரும் போட்டியில் காலி அலோசியஸ் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிகளுக்கிடையிலான போட்டியில்  மாரிஸ் ஸ்டெல்லா அணி இலகுவாக வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

கதிரான மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ,நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியானது , புனித அலோசியஸ் கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புனித அலோசியஸ் கல்லூரி ஏமாற்றம் அளித்தது. 46.2 ஓவர்கள் முடிவில் புனித அலோசியஸ் கல்லூரியினால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. அலோசியஸ் கல்லூரி சார்பாக கவிந்து நிர்மல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார். மேலும் ஹரீன் புத்தில 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மாரிஸ் ஸ்டெல்லா அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய திமிந்து பிரித்ம 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் சங்க பூர்ண 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ரவிந்து மற்றும் பசிந்து தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

164 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியானது சிறப்பாக துடுப்பெடுத்தாடி, 43 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்று  இலகுவாக வெற்றியை தமதாக்கி கொண்டது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்ற கவின் பெரேரா 45 ஓட்டங்கள் குவித்து, தமது கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு துணையாக லசித் க்ரூஸ்புள்ளே 32 ஓட்டங்களையும், அஷான் பெர்னாண்டோ 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அலோசியஸ் கல்லூரி சார்பாக கவிக டிஷான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவ் வெற்றியின் மூலமாக மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியானது காலிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி – 163 (46.2) – நவிந்து நிர்மல் 47, ஹரீன் புத்தில 36, திமிந்து ப்ரீத்ம 3/25

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 164 (43) – கெவின் பெரேரா 45, கவிக டிஷான் 3/36


மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய

சிங்கர் 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டிகளில், முதல் சுற்று போட்டியொன்றில் மஹாநாம மற்றும் தர்மபால கல்லூரிகள் மோதிக்கொண்டன.

தர்மபால கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மஹாநாம கல்லூரியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மஹாநாம கல்லூரியானது சிறப்பான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது. 76.3 ஓவர்களில் 371 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மஹாநாம கல்லூரி சார்பாக மலிந்து மதுரங்க 184 ஓட்டங்களை குவித்து சாதனை படைத்தார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மதுரங்க, மஹாநாம கல்லூரி 371 எனும் இமாலய ஓட்ட எண்ணிக்கையை அடைய காரணமானார். மேலும் நிதூக்க வலிகள 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தர்மபால கல்லூரி சார்பாக சஷிக டில்ஷான் 5 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தர்மபால கல்லூரியினால் முதல் இன்னிங்சில் மகாநாம கல்லூரியின் இமாலய இலக்கை அடைய முடியவில்லை. தர்மபால கல்லூரி 74.3 ஓவர்களில் 258 ஓட்டங்களுக்கு சுருண்டது. தர்மபால கல்லூரி சார்பாக மலித் சந்தகளும் அரைச்சதம் பூர்த்தி செய்தார். மேலும் கனிஷ்க ஜயசுந்தர 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். வத்சர பெரேரா மஹாநாம கல்லூரி சார்பாக 66 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தமது 2ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த மஹாநாம கல்லூரி 4 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில் 2ஆம் நாள்ஆட்டம் நிறைவடைந்ததால், போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. 2ஆம் இன்னிங்சில் மகாநாம கல்லூரி சார்பாக பவன் ரத்நாயக்க மற்றும் கவிந்து முனசிங்க அரைசதம் பூர்த்தி செய்தனர்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 371(76.3) – மலிந்து மதுரங்க 184, நிதூக்க வழிகள 53, சஷிக டில்ஷான் 5/72lo

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 258 (74.3) –  மலித் சந்தகளும் 50, கனிஷ்க ஜயசுந்தர 48, வத்சர பெரேரா 5/66

மஹாநாம கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 172/4 –  பவன் ரத்நாயக்க 72*, கவிந்து முனசிங்க 50