மெதிவ் வேட், ஹேல்ஸ் அபாரம்; இங்கிலாந்து, ஆஸி. அணிகள் வெற்றி

80
 

நேற்று (20) நடைபெற்று முடிந்திருக்கும் T20I போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மற்றைய மோதலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி விளையாடிய முதல் போட்டி மொஹாலியில் நேற்று (20) ஆரம்பமாகியது.

பின்னர் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இந்தியாவினை துடுப்பாடப் பணித்திருந்தது. இதன்படி போட்டியில் முதலில் ஆடிய இந்திய வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் KL ராகுலின் அதிரடியோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்கள் எடுத்தனர். இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹார்திக் பாண்டியா 30 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் எடுக்க, KL ராகுல் 35 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 55 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இவர்களோடு சூர்யகுமார் யாதவ் உம் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் உடன் 55 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜோஸ் ஹேசல்வூட் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 209 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா போட்டியின் வெற்றி இலக்கினை கெமரோன் கீரின் மற்றும் மெதிவ் வேட் ஆகியோரின் அதிரடியோடு 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களுடன் அடைந்து கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்த கெமரோன் கீரின் தன்னுடைய கன்னி T20I அரைச்சதத்துடன் 30 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் மெதிவ் வேட் தனது இறுதி நேர அதிரடியுடன் 21 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்கள் பெற்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் அக்ஷார் படேல் 3 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்த போதும் அவர்களின் பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 208/6 (20) ஹார்திக் பாண்டியா 71(30)*, KL ராகுல் 55(35), சூர்யகுமார் யாதவ்  46(25), நேதன் எல்லிஸ் 30/3(4), ஜோஸ் ஹேசல்வூட் 39/2(4)

அவுஸ்திரேலியா – 211/6 (19.2) கெமரோன் கீரின் 61(30), மெதிவ் வேட் 45(21), அக்ஷார் படேல் 17/3(4), உமேஷ் யாதவ் 27/(2)

முடிவு – அவுஸ்திரேலியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி

பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து

மொத்தம் 7 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆட பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாடிய முதல் போட்டி கராச்சியில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்கள் பெற்றனர். பாகிஸ்தானின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக மொஹமட் ரிஸ்வான் 46 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் உடன் 68 ஓட்டங்களை எடுத்திருக்க, இங்கிலாந்து பந்துவீச்சில் அறிமுகவீரரான லூக் வூட் 3 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீட் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர். இந்தப் போட்டியின் மூலம் மொஹமட் ரிஸ்வான் T20I போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் (52) 2000 ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரராகவும் மாறியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 159 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஹர்ரி புரூக் ஆகியோரின் ஆட்டத்தோடு 19.2 ஓவர்களில் போட்டியின் வெற்றி இலக்கை 4 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களுடன் அடைந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்த அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் உடன் 53 ஓட்டங்கள் எடுக்க, ஹர்ரி புரூக் 25 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் உடன் 42 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் உஸ்மான் காதிர் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 158/7 (20) மொஹமட் ரிஸ்வான் 68(46), லூக் வூட் 24/3(4), ஆதில் ரஷீட் 27/2(4)

இங்கிலாந்து – 160/4(20) அலெக்ஸ் ஹேல்ஸ் 53(40), ஹர்ரி புரூக் 42(25)*, உஸ்மான் காதிர் 36/2(4)

முடிவு – இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<