கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

4729

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி ; பதவியில் நீடிக்கும் மஹேல!

T20 உலகக் கிண்ணத் தொடரும் நெருங்கி வரும் நிலையில் புதிய கிரிக்கெட் விதிமுறைகள் பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அறிமுகம் செய்த இந்த புதிய விதிமுறைகள் குறித்து நோக்குவோம்.

உமிழ்நீர் பயன்படுத்த தடை

கடந்த இரண்டு வருடங்களாக கொவிட்-19 வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்தினை மிளிரச் (Shine) செய்வதற்கு உமிழ்நீர் பயன்படுத்துவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.

எனினும், இந்த தடையினை நிரந்தரமாக்க தீர்மானித்திருக்கும் ICC இனி வரும் நாட்களில் பந்தினை மிளிரச் செய்ய களத்தடுப்பு அணி உமிழ்நீர் பயன்படுத்துவதனை முற்றாக தடை செய்திருக்கின்றது.

மன்கட் ஆட்டமிழப்பு முறை

துடுப்பாட்ட எதிர் முனையில் உள்ள துடுப்பாட்டவீரர் தனது முனையில் இருந்து முன்னே செல்லும் சந்தர்ப்பத்தில் (அதாவது பந்துவீச முன்னர்) பந்துவீச்சாளருக்கு அவரினை ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருப்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதோடு இது மன்கட் ஆட்டமிழப்பாக கருதப்படாமல் சாதாரண ரன் அவுட் ஆட்டமிழப்பாகவே இனிமேல் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பிடியெடுப்பு ஆட்டமிழப்பை அடுத்து வரும் புதிய வீரர்

இனி வரும் காலங்களில் பிடியெடுப்பு ஆட்டமிழப்பின் பின்னர் வரும் புதிய துடுப்பாட்டவீரர், அடுத்த பந்துக்கான துடுப்பாட்ட தானத்தில் இருந்து ஆடும் வாய்ப்பினைப் பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பிடியெடுப்பு ஆட்டமிழப்பின் போது இரண்டு துடுப்பாட்டவீரர்களும் ஓட்டங்கள் பெறும் நோக்கில் ஒருவரை ஒருவர் தாண்டிய (Cross) போதும் புதிதாக வரும் துடுப்பாட்டவீரருக்கே அடுத்த பந்தினை எதிர்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பபடும்.

புதிய துடுப்பாட்ட வீரர்களுக்கான நேர மட்டுப்படுத்தல்

இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட்டமிழப்பின் பின்னர் புதிய துடுப்பாட்டவீரர் ஒருவர் இரண்டு நிமிடங்களுக்குள்ளும், T20I போட்டிகளில் 90 செக்கன்களுக்குள்ளும் துடுப்பாட வர வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்தினை ஆடும் வாய்ப்பு

துடுப்பாட்ட வீரரரின் துடுப்பு மட்டை அல்லது அவரது உடம்பின் ஏதோ ஒரு பகுதி ஆடு களத்தில் இருக்கும் நிலையிலேயே வீரர் பந்தினை துடுப்பாட வேண்டும். அவ்வாறு இல்லாமல் வீரர் ஆடுகளத்தை விட்டு வெளியே சென்று ஆடினால் அந்தப் பந்தினை நடுவர் “டெட் போல்” (Dead Ball) என சைகை காண்பிப்பார்.

SA20 தொடர் ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்!

மாற்றமாக, பந்துவீச்சாளர் வீசும் பந்தானது ஆடுகளத்தை விட்டு (Pitch) வெளியே செல்லும் விதத்தில் இருந்தால், அது “நோ போல் (No Ball)” ஆக கருதப்படும். அதன் மூலம் துடுப்பாட்டவீரர்களுக்கு பந்தினை ஆடுவதற்கான வாய்ப்பினை அதிகப்படுத்துவது எதிர்பார்க்கப்படுகின்றது.

முறையற்ற களத்தடுப்பு

பந்துவீச்சாளர் பந்துவீசுவதற்கு தயாராகி ஓட ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் களத்தடுப்பில் ஈடுபடும் தரப்பானது ஏதாவது முறையற்ற களத்தடுப்பு முறைககளை கையாளும் சந்தர்ப்பத்தில் அது துடுப்பாடும் அணிக்கு 5 ஓட்டங்களை மேலதிகமாக வழங்கும் ஒரு செயற்பாடாக மாறும் என்பதோடு, வீசப்பட்ட பந்தும் “டெட் போல் (Dead Ball)” ஆக கணிக்கப்படும்.

துடுப்பாட்டவீரரினை நோக்கி ரன் அவுட்டுக்காக வீசப்படும் பந்து

துடுப்பாட்ட முனையில் இருக்கும் துடுப்பாட்டவீரரினை பந்துவீச முன்னர் பந்துவீச்சாளர் ரன் அவுட் செய்ய முற்படுவராயின் அப்போது வீசப்படும் பந்து “டெட் போல் (Dead Ball)” ஆக கணிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பந்துவீச அதிக நேரம் எடுக்கும் அணிக்கு தண்டம்

வழங்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறும் சந்தர்ப்பத்தில் போட்டியிலே களத்தடுப்பு செய்யும் அணிக்கு தண்டனை வழங்கும் முறை T20I போட்டிகளில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதாவது களத்தடுப்பில் ஈடுபடும் அணி உரிய நேரத்திற்குள் பந்துவீசாத போது போட்டியின் இறுதி ஓவர்களில் தமது களத்தடுப்பாளர் ஒருவரை மைதானத்தின் பௌண்டரி எல்லையில் இருந்து உள்ளே எடுக்க வேண்டும். இது துடுப்பாட்ட அணிக்கு ஓட்டங்கள் பெற சாதகமாக அமையும்.

போட்டியின் போதான இந்த தண்டனை முறை 2023ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ள ஆடவர் ஒருநாள் சுபர் லீக்கினை அடுத்து, ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<