“இந்த இளம் அணியால் போட்டிகளில் வெற்றிபெறமுடியும்” தசுன் ஷானக

India tour of Sri Lanka 2021

957

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தாலும், இலங்கையின் இளம் அணியால் போட்டிகளில் வெற்றிபெறமுடியும் என நம்புவதாக அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளைய தினம் (23) நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அணிக்கு போட்டிகளில் வெற்றிபெறுவது தொடர்பில் மறந்துப்போகவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐசிசி சுப்பர் லீக்கில் மேலும் ஒரு புள்ளியை இழக்கும் இலங்கை

“நாம் நீண்டகாலமாக போட்டிகளில் வெற்றிபெறவில்லை. எனினும், போட்டிகளில் எவ்வாறு வெற்றிபெறுவது என்பது தொடர்பில் மறந்துவிடவில்லை.  அணியின் ஒவ்வொரு வீரர்களதும், பணியை சரியாக அறிந்து, குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்தால் நிச்சயமாக எம்மால் வெற்றிபெறமுடியும்.

இங்கிலாந்து தொடரிலிருந்து பார்க்கும் போது, வீரர்கள் அவர்களுடைய தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறுவதை அவதானிக்க முடிகிறது. எனவே, இந்த இறுதி ஒருநாள் போட்டியை சிறப்பாக நிறைவுசெய்யவேண்டும் என எதிர்பார்க்கிறோம். வீரர்கள் என்ற ரீதியில் நாம் முன்னேறுவது தொடர்பில் சிந்திக்கவேண்டும். இதில், சிலவேளைகளில் பின்னடைவு ஏற்படலாம். எனினும், நாம் செல்லும் பாதை சரியானது என சிந்திக்கவேண்டும். 

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றிந்தால், நிச்சயமாக குறித்த மனத்திடத்துடன், மூன்றாவது ஒருநாள் போட்டியில் நிச்சயமாக வெற்றிபெறலாம் என்ற மனநிலை உருவாகியிருக்கும். எவ்வாறாயினும், இந்த இளம் அணியுடன், போட்டிகளில் வெற்றிபெறமுடியும் என நினைக்கிறேன்” என்றார்.

அதேநேரம், துடுப்பாட்ட வரிசையில் மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் தசுன் ஷானக குறிப்பிட்டார். “வீரர் ஒருவர் அணியில் இணைந்த பின்னர் அவருக்கு அனுபவம் தேவை. பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடி சரித் அசலங்கவை 5ம் இலக்க வீரராக மாற்றியுள்ளேன். இங்கிலாந்து தொடரில் பிரகாசிக்காத காரணத்தால், அவர் சிறந்த வீரர் இல்லையென கூறமுடியாது.

சரித் அசலங்கவுக்கு இப்போது, எவ்வாறு சர்வதேச கிரிக்கெட்டில் ஓட்டங்களை குவிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அனுபவத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கலாம். அதேபோன்று, சாமிக்க கருணாரத்னவும் இன்னிங்ஸை சிறப்பாக நிறைவுசெய்யக்கூடியவர் என நிரூபித்துள்ளார்.

அவருக்கு அனுபவத்தை கொடுக்கவேண்டும். தொடர்ந்தும் அதே இடத்தில் வாய்ப்புகளை கொடுக்கும் போது, அனுபவம் பெறப்படும். இதனால், எதிர்காலத்தில் குறித்த இடங்களுக்கான சிக்கல்கள் ஏற்படாது. அனுபவங்கள் தேவை என்பதால், குறித்த இருவருக்கும் இவ்வாறான துடுப்பாட்ட இடங்களை கொடுத்துள்ளேன்” என குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளைய தினம் நடைபெறவுள்ள போட்டியில், அணியில் இரண்டு மாற்றங்கள் அளவில் இருக்கலாம் என தசுன் ஷானக தெரிவித்தார். குறிப்பாக கசுன் ராஜித உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஒரு மாற்றம் ஏற்படுத்தப்படும் என்பதுடன், மேலும் ஒரு மாற்றம் இடம்பெறலாம் என ஷானக குறிப்பிட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<