ஐசிசி சுப்பர் லீக்கில் மேலும் ஒரு புள்ளியை இழக்கும் இலங்கை

India tour of Sri Lanka 2021

3074

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்  போட்டியில், பந்து ஓவர்களை வீசுவதற்கு தாமதமாக்கிய குற்றச்சாட்டுக்காக, இலங்கை அணியின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  ஒருநாள் போட்டி கடந்த 20ம் திகதி நடைபெற்றது. இந்தப்போட்டியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஒரு ஓவரை வீசுவதற்கு தவறியுள்ளதாக ஐசிசி குற்றம் சுமத்தியுள்ளது.

ஷானகவுடன் கருத்து முரண்பாடா? உண்மையை கூறும் மிக்கி ஆர்தர்

ஐசிசியின் விதிமுறைப்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களுடைய ஓவர்களை நிறைவுசெய்ய தவறும் பட்சத்தில் ஒரு ஓவருக்கு 20 சதவீதம் போட்டிக்கட்டணத்தில் அபராதமாக அறவிடப்படும். அதன்படி, அணி வீரர்களின் போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இலங்கை அணி விளையாடிய இந்த தொடர், ஐசிசியின் ஒருநாள் சுப்பர் லீக்குக்கான தொடர் என்பதால், குறித்த தொடரின் விதிமுறையின்படி, சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இருந்து இலங்கை அணிக்கு, ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது. சுப்பர் லீக் விதிமுறைப்படி, ஒரு ஓவர் வீசுவதற்கு தவறுவதன் காரணமாக, அணியின் புள்ளிகளிலிருந்து ஒரு புள்ளி குறைக்கப்படும்.

அதன்படி, இலங்கை அணி தாமதமாக பந்து ஓவர்களை வீசிய குற்றச்சாட்டில், ஏற்கனவே 2 புள்ளிகளை இழந்துள்ளதுடன், தற்போது மேலும் ஒரு புள்ளியை இழந்துள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன், 12வது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணையை போட்டி மத்தியஸ்தரான ரன்ஜன் மடுகல்ல மேற்கொண்ட நிலையில், குறித்த குற்றத்தை இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக ஏற்றுக்கொண்டார். எனவே, இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகள் தேவையில்லை என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி நாளைய தினம் (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…