சக வீரரை மைதானத்தில் தாக்கிய வீரருக்கு 5 வருட தடை

94
Espncricinfo

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சஹாடட் ஹுசைனுக்கு இரண்டு வருட இடைக்காலத் தடையுடன் கூடிய 5 வருட தடையினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) வழங்கியுள்ளது.

இளையோர் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி வசம்

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான நெஷனல் கிரிக்கெட் லீக்கின் டாக்கா டிவிஷன் மற்றும் குல்னா டிவிஷன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது (16), தங்களுடைய அணியின் சக வீரரான அரபாத் சன்னியை தாக்கிய குற்றச்சாட்டுக்காக சஹாடட் ஹுசைனுக்கு இந்த தடை வழங்கப்பட்டுள்ளது.

குறித்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் அரபாத் சன்னி பந்துவீசிக்கொண்டிருந்த போது, சஹாடட் ஹுசைனிடம் பந்தினை ஒருபக்கம் தேய்த்து புதிதாக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சஹாடட் ஹுசைன் மறுத்ததுடன், கோபமடைந்து அரபாட் சன்னியை தாக்கியுள்ளார். எனினும், பின்னர் வீரர்கள் ஒன்றிணைந்து இருவரையும் சமாதனப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த விசாரணையை போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட போது, தனது குற்றத்தை சஹாடட் ஹுசைன் ஒப்புக்கொண்டுள்ளார். சஹாடட் ஹுசைன் குற்றத்தை ஏற்றுக்கொண்ட பின்னர், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றைய தினம் அவருக்கு தடை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் 4ம் தர குற்றத்தை புரிந்துள்ள சஹாடட் ஹுசைனுக்கு இரண்டு வருட இடைக்காலத் தடையுடன் கூடிய, 5 வருட தடை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை ரூபாய் பெறுமதியில் சுமார் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சஹாடட் ஹுசைன், 

“நான் அரபாத் சன்னியை தாக்கியது உண்மை. அதீத கோபத்தால் இதனை செய்துவிட்டேன். ஆனால், அரபாத்தும் என்னுடன் தவறான முறையில் நடந்துக்கொண்டார். நான் பந்தினை வீசும் போது, பந்தினை ஒருபக்கம் புதிதாக்கி தருமாறு அரபாத்திடம் கேட்ட போது, அவர் அதனை செய்யவில்லை. அதற்கு நான் ஏன் என கேட்ட போது, அவர் பதிலளித்த விதமே அவரை தாக்குவதற்கான காரணம்” என்றார்.

சஹாடட் ஹுசைன் பங்களாதேஷ் அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகள், 51 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், முறையே 72, 47 மற்றும் 4  என விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<