இரண்டு தடவைகள் T20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து அதிர்ச்சிகரமான முறையில் வெளியேறியிருக்கின்றது.
>> MRI பரிசோதனைக்கு முகங்கொடுத்துள்ள பெதும்
T20 உலகக் கிண்ண முதல் சுற்றில் குழு B இல் காணப்பட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல இன்று தமக்கு எஞ்சியிருந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் காணப்பட்டிருந்தது. அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தாம் முன்னர் விளையாடியிருந்த போட்டிகளில் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்ற குறித்த போட்டியில் அயர்லாந்து அணி 09 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்ய, மேற்கிந்திய தீவுகள் அணி சுபர் 12 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பினை பரிதாபமான முறையில் இழந்திருப்பதோடு T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்தும் வெளியேறியிருக்கின்றது.
அதேநேரம் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அயர்லாந்து அணி குழு B இல் இருந்து இரண்டு வெற்றிகளுடன் சுபர் 12 சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாக மாறியிருக்கின்றது. ஆனால் அயர்லாந்து அணி சுபர் 12 சுற்றில் விளையாடும் குழு குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
>> T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றில் இலங்கை
இதேநேரம் குழு B இல் இருந்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் மற்றைய அணி எதுவென்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அந்த அணி பற்றி தெரிந்து கொள்ள ஜிம்பாப்வே – ஸ்கொட்லாந்து அணிகள் இடையில் தற்போது நடைபெற்று வரும் போட்டி நிறைவடைய வேண்டும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<