உலகக் கிண்ணத்திலிருந்து ஆஸி., இங்கிலாந்து வீரர்கள் விலகல்

ICC T20 World Cup 2022

190

T20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து விக்கெட் காப்பாளர் ஜோஷ் இங்லிஷ் மற்றும் இங்கிலாந்து அணியிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி ஆகிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மறுபுறத்தில் சுபர் 12 சுற்று ஆரம்பமாவதற்கு முன் பல அணிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் காயம் மற்றும் உபாதைகள் காரணமாக அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

இந்த நிலையில் T20 உலகக் கிண்ணத்திலிருந்து அவுஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஷ் விலகியுள்ளார். சிட்னியில் கோல்ப் விளையாடியபோது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

எவ்வாறாயினும், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியின் மாற்று விக்கெட் காப்பாளராக ஜோஷ் இங்லிஷ் கருதப்பட்டதால் அவருக்குப் பதிலாக இளம் துடுப்பாட்ட சகலதுறை வீரர கெமருன் க்ரீன் மாற்றீடு வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

23 வயதான இவர், அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய அணிக்கெதிரான T20 தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். குறித்த தொடரில் டேவிட் வோர்னருக்குப் பதிலாக களமிறங்கிய அவர், 2 அரைச் சதங்களையும் குவித்திருந்தார்.

இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லே பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளர். அவருக்குப் பதிலாக மாற்றீடு வீரராக மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த வேகப் பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்படுகிறார்.

இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 T20i போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள டைமல் மில்ஸ் 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<