மீண்டும் T20 King ஆகும் கனவுடன் உள்ள பாகிஸ்தான்

ICC T20 World Cup – 2021

269

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ICC யின் ஏழாவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (17) முதல் இடம்பெறவுள்ளது. இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள 3 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்குபெறும் இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள 4 இடங்களுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் 17ஆம் திகதி ஓமானில் ஆரம்பமாகவுள்ளது.

T20 உலகக்கிண்ணத்தில் சாதித்து காட்டுமா இலங்கை?

இந்த நிலையில், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பிரபல அணிகளில் ஒன்றாக கருதப்படும் பாகிஸ்தான் அணி, சுப்பர் 12 பிரிவில் குழு 2 இல் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் அணியோடு சேர்த்து இந்தியா, நியுசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும், தகுதிகாண் சுற்றில் B குழுவில் முதலிடம் பெறும் அணியும், A குழுவில் 2ஆம் இடம்பெறும் அணியும் பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள பிரிவிற்கு தகுதிபெறும்.

எனவே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் பலம், பலவீனங்கள் என்ன? கடந்தகால வெற்றிகள் மற்றும் T20 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை இந்த சிறப்புக் கட்டுரையில் பார்ப்போம்.

T20 உலகக் கிண்ணங்களில் பாகிஸ்தான் அணி

ICC யினால் நடத்தப்பட்ட அனைத்து முக்கிய தொடர்களிலும் சம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி, 2007இல் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. ஆனால், 2009இல் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக T20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

1992இல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் அணி வென்ற முதல் சர்வதேச சம்பியன் பட்டம் இதுவாகும்.

அதன்பிறகு 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர்களில் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணி, கடைசியாக 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடர்களில் சுப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இந்தியாவுடன் விளையாடிய 5 போட்டிகளில் 4இல் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ICC யின் T20 உலக தரவரிசையில் தற்போது 3ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பாபர் அசாம் தலைமையில் பலமிக்க அணிகளில் ஒன்றாக களமிறங்கவுள்ளது.

கடந்தகால பிரகாசிப்புகள்

2016 T20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி, கடந்த 2017, 2018 காலப்பகுதியில் நடைபெற்ற T20 தொடர்களில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளை வீழ்த்தியது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் நடப்புச் சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் அணி வீழ்த்தியிருந்தது.

2019இல் 2 T20 தொடர்களில் பாகிஸ்தான் அணி விளையாடியது. இதில் தென்னாபிரிக்காவுடனான தொடரை 2-1 எனவும், இங்கிலாந்துடனான ஒற்றை T20 போட்டியையும் பாகிஸ்தான் அணி பறிகொடுத்தது.

இதனிடையே, 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டாலும், பாகிஸ்தான் அணி நான்கு T20 தொடர்களில் விளையாடியது.

இதில் பங்களாதேஷ், ஜிம்பாப்வே அணிகளுக்கெதிரான T20 தொடர்களை வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துடனான T20 தொடரை 1க்கு 1 என சமப்படுத்தியதுடன், நியூசிலாந்துடனான T20 தொடரை 2க்கு 1 என பறிகொடுத்தது.

இதுஇவ்வாறிருக்க, இந்த ஆண்டு பாகிஸ்தான் அணி ஐந்து T20 தொடர்களில் விளையாடியது. இதில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வைத்து 2க்கு 1 என வீழ்த்திய அதேவேளை, பாகிஸ்தானில் வைத்தும் 2க்கு 1 என அந்த அணி தோற்கடித்தது.

அதேபோல, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 தொடரை வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துடனான T20 தொடரை 2க்கு 1 என பறிகொடுத்தது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணி இறுதியாக விளையாடிய 5 T20 தொடர்களில் 4இல் வெற்றியீட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தத்தில் கடந்த நான்கு வருடங்களில் பாகிஸ்தான் அணி T20 வடிவத்தில் சிறப்பான முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது.

இதுஇவ்வாறிருக்க, மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்து வந்த சர்பராஸ் அஹமட்டின் Form மற்றும் மோசமான தலைமைத்துவம் காரணமாக 2019 ஒக்டோபர் மாதம் தலைவர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக அசார் அலியும், T20 அணியின் தலைவராக பாபர் அசாமும் நியமிக்கப்பட்டனர்.

இரண்டாவது T20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றுமா இங்கிலாந்து?

ஏவ்வாறாயினும், சர்பராஸ் அஹமட்டின் தலைமையிலும் பாபர் அசாமின் தலைமையிலும் பாகிஸ்தான் அணி T20 வடிவத்தில் தமது தொடர்ச்சியான பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதேபோல, சிரேஷ்ட வீரர் சொஹைப் மலிக், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமிர், மொஹமட் ஹபீஸ் உள்ளிட்ட அனுபவ வீரர்களின் பங்களிப்பும் இக்காலப்பகுதியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தன.

மறுபுறத்தில் வருடந்தோறும் நடைபெறுகின்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் மூலம் மொஹமட் ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் உள்ளிட்ட திறமையான வீரர்கள் பாகிஸ்தான் T20 அணியில் இடம்பிடித்து திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததையும் பாகிஸ்தான் அணியின் அண்மைக்கால அசுர முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக குறிப்பிடலாம்.

ஒட்டுமொத்தத்தில் 2016 T20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னராக பாகிஸ்தான் அணியின் வளர்ச்சி அந்த அணிக்கு இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய நம்பிக்கையை கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியை இளம் வீரர்களைக் கொண்டு கட்டமைப்பதில் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு முக்கிய இடம் உண்டு.

2017இல் பாகிஸ்தான் அணி ICC யின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றதுடன், அதன்பிறகு மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் முன்னணி அணியாக வலம் வந்தது.

 இதில் பாகிஸ்தான் அணி ICC யின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும், T20 தரவரிசையில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அனைத்து வெற்றிகளுக்குப் பின்னால் மிக்கி ஆர்தரின் பங்களிப்பும் இருந்தது என்றால் அது மிகையாகாது.

எவ்வாறாயினும், 2019இல் மிக்கி ஆர்தரின் பதவி நீக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். அவருடைய காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சற்று பின்னடைவை சந்தித்தாலும், T20 போட்டிகளில் தொடர்ந்து முன்னிலை அணியாக வலம் வந்தது.

கன்னி T20 உலகக் கிண்ண வெற்றிக்காக களமிறங்கும் அவுஸ்திரேலியா

எவ்வாறாயினும், இம்முறை T20 உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் உள்ள பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் ற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களாக முறையே அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹைடன் மற்றும் தென்னாபிரிக்காவின் வெர்னான் பினாண்டர் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர்.

அதேபோல, கடந்த மாதம் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்த மிஸ்பா உல் ஹக்குக்குப் பதிலாக அந்த அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் சுழல் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக் செயல்படவுள்ளார்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக அணித்தலைவர் பாபர் அசாம் விளங்குகிறார்.

2016 T20 உலகக் கிண்ணத்தில் புதுமுக வீரராகக் களமிறங்கிய பாபர் அசாம், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அந்த அணியின் தலைவராக செயல்படவுள்ளார்.

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்து வருகின்ற பாபர் அசாம், ICC யின் T20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். துடுப்பாட்டத்தைப் போல இவரின் தலைமைத்துவமும் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் அணியில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு துடுப்பாட்ட வீரராக மொஹமட் ரிஸ்வான் உள்ளார். ICC T20 துடுப்பாட்ட தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள அவர், 2021இல் 17 போட்டிகளில் விளையாடி 49.00 என்ற சராசரியில் 752 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதேபோல, அனுபவ வீரர் மொஹமட் ஹபீஸ், அண்மைக்காலமாக பாகிஸ்தான் T20 அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றார். இவரது துடுப்பாட்டமும், பந்துவீச்சும் பாகிஸ்தான் அணியின் அண்மைக்கால வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தது.

இதுஇவ்வாறிருக்க, முன்னதாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த சொஹைப் மக்சூத் காயம் காரணமாக விலகியதையடுத்து அவருக்குப் பதிலாக அனுபவ வீரரான சொஹைப் மலிக் பாகிஸ்தான் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அணியில் சொஹைப் மலிக் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதன்பின்னர் அணியில் செய்யப்பட்ட 3 மாற்றங்களிலும் மலிக்கின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அவரை அணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு தானாகவே உருவாகி, இறுதியில் அவரை அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சொஹைப் மலிக் அணியில் உள்ள அனுபவ வீரர் ஆவார். இதில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராக சொஹைப் மலிக் செயல்பட்டாலும், அவரால் T20 உலகக் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.

39 வயதான சொஹைப் மலிக், 21 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். குறிப்பாக T20 கிரிக்கெட்டில் தற்போதுள்ள மிகச்சிறந்த வீரர்களில் சொஹைப் மலிக்கும் ஒருவர். துடுப்பாட்டம் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடிய சிறந்த சகலதுறை வீரரான சொஹைப் மலிக், T20 கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை ஆடிவரும் வெகுசில வீரர்களில் ஒருவர் ஆவார்.

எனவே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் மத்திய வரிசையைப் பலப்படுத்துவதற்கு சொஹைப் மலிக் போன்ற வீரரின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.

அதேபோல, பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு அனுபவ வீரரும், முன்னாள் தலைவருமான சர்பராஸ் அஹமட் இறுதி நேரத்தில் பாகிஸ்தான் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இவரது கடந்தகால திறமைகள் சிறப்பாக இல்லாவிட்டாலும், அவரது முன்னைய தலைமைத்துவ அனுபவம் பாபர் அசாமுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

T20 உலகக் கிண்ணம்; தகுதி சுற்றில் இலங்கைக்கு எதிரான சவால்கள்

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி, ஆசிப் அலி, பக்கர் சமான் ஆகியோர் துடுப்பாட்டத்தை பலப்படுத்தவுள்ளனர்.

மேலும், சகலதுறை வீரர்களாக உப தலைவர் சதாப் கான், மொஹமட் நவாஸ், இமாத் வசிம், மொஹமட் வசிம் ஜூனியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வேகப் பந்துவீச்சைப் பலப்படுத்த ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தயாராக உள்ளனர்.

பாகிஸ்தான் அணி விபரம்

பாபர் அசாம் (அணித்தலைவர்), சதாப் கான் (உப தலைவர்), ஆசிப் அலி, ஹைதர் அலி, பக்கர் சமான், மொஹமட் ரிஸ்வான், சர்பராஸ் அஹமட், மொஹமட் ஹபீஸ், மொஹமட் நவாஸ், மொஹமட் வசிம் ஜுனியர், இமாத் வசிம், சொஹைப் மலிக், ஷஹீன் அப்ரிடி, ஹஸன் அலி, ஹரிஸ் ரவூப்

மேலதிக வீரர்கள்: குஷ்தில் ஷா, ஷனாவாஸ் தானி, உஸ்மான் காதிர்

இறுதியாக,

பாகிஸ்தான் அணியை முதல் தடவையாக ஐசிசி நடத்துகின்ற உலகக் கிண்ணத் தொடரொன்றில் வழிநடத்தவுள்ள பாபர் அசாம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு T20 உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்கின்ற நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளார்.

அதேபோல, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி, தமது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. எவ்வாறாயினும், இதுவரை உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வெற்றி பெற்றதே கிடையாது என்பது வரலாறு.

ஆனால், அந்த மோசமான வரலாற்றை மாற்றி இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்திக்காட்டுவோம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவெனில் ஏற்கனவே தமது சொந்த மைதானமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி நிச்சயம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் அதிக சாதகத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒருபுறத்தில் மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் ஆகியோரது திடீர் இராஜினாமாக்கள் அந்த அணிக்கு பின்னடைவைக் கொடுத்தது. தேபோன்று, T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக நடைபெறவிருந்த நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான T20 தொடர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.

இவை அந்த அணிக்கு மன உளைச்சலைக் கொடுத்திருந்தாலும் கடந்த காலங்களில் ஓர் அணியாக வெளிப்படுத்திய திறமைகள் பாகிஸ்தான் அணிக்கு இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் நிச்சயம் கைகொடுக்கும்

குறிப்பாக, இம்முறை T20 உலகக் கிண்ணத்தை வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு அணியாக பாகிஸ்தானும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விளையாடவுள்ள போட்டி அட்டவணை

  • எதிர் இந்தியா – ஒக்டோபர் 24 – டுபாய்
  • எதிர் நியூசிலாந்து – ஒக்டோபர் 26 – சார்ஜா
  • எதிர் ஆப்கானிஸ்தான் – ஒக்டோபர் 29 – டுபாய்
  • எதிர் தகுதிகாண் சுற்று ஏ குழுவில் இரண்டாமிடம் பெறும் அணி – நவம்பர் 02 – டுபாய்
  • எதிர் தகுதிகாண் சுற்று பி குழுவில் முதலிடம் பெறும் அணி –நவம்பர் 07 – சார்ஜா

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…