கொல்கத்தா அணிக்கு எதிராக ஹெட்ரிக் சாதனை படைத்த சஹால்

Indian Premier League 2022

102

ஐ.பி.எல். (IPL) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் நேற்றைய தினம் (18) ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக இந்தப்போட்டியில் அணியின் 17வது ஓவரை வீசிய சஹால், மொத்தமாக குறிப்பிட்ட ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காண்பித்திருந்தார்.

டெல்லி அணியின் மிச்சல் மார்ஷிற்கு கொவிட்-19 தொற்று

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிசார்பாக ஜோஸ் பட்லர் இந்த ஆண்டில் தன்னுடைய இரண்டாவது சதத்தை பதிவுசெய்து 103 ஓட்டங்களை விளாசியிருந்தார். இந்த ஓட்ட எண்ணிக்கையின் உதவியுடன் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி மிகச்சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தது. ஆரோன் பின்ச் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்க, ஷிரேயாஸ் ஐயர் மறுமுனையில் தன்னுடைய அரைச்சதத்தை கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல தொடங்கினார்.

வேகமாக ஓட்டங்களை குவித்த கொல்கத்தா அணிக்கு 6 விக்கெட்டுகள் கைவசமிருக்க 4 ஓவர்களில் வெறும் 40 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. இந்தநிலையில் தன்னுடைய 4வது வீசிய சஹால் முதல் பந்திலேயே வெங்கடேஸ் ஐயரை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச்செய்தார்.

தொடர்ந்து தன்னுடைய 4வது பந்தை வீசிய சஹால் 85 ஓட்டங்களை பெற்று அணியை சிறப்பான ஓட்ட எண்ணிக்கைக்கு நகர்த்திய அணித்தலைவர் ஷிரேயாஸ் ஐயரை LBW முறையில் வீழ்த்தினார். தொடர்ந்து தன்னுடைய அடுத்த பந்தில் சிவம் மாவியை பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழக்கச்செய்தார்.

ஹெட்ரிக் வாய்ப்புக்காக பந்து ஓவரின் இறுதிப்பந்தை, 14 பந்தில் அரைச்சதம் கடந்த பெட் கம்மின்ஸிற்கு எதிராக வீச, கம்மின்ஸ் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் IPL வரலாற்றில் தன்னுடைய முதல் ஹெட்ரிக் விக்கெட்டுகளை சஹால் கைப்பற்றினார்.

அதன்படி பிரவீன் தாம்பே, ஷேன் வொட்சன் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு அடுத்தப்படியாக ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்ட இவர், IPL தொடரில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 22வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், இந்தப்போட்டியில் சஹால் 5 விக்கெட்டுகளை மொத்தமாக வீழ்த்தியதுடன், போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<