கன்னி T20 உலகக் கிண்ண வெற்றிக்காக களமிறங்கும் அவுஸ்திரேலியா

204
Australia - ICC World T20

ஏழாவது T20 உலகக் கிண்ணத் தொடர், எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில் இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, குறித்த சுற்றின் குழு 1 இல் தமது கன்னி T20 உலகக் கிண்ணத்திற்காக போட்டியிடுகின்றது.

>> T20 உலகக் கிண்ண குழு B இல் முன்னேற்றம் காட்டுமா பங்களாதேஷ் அணி??

அந்தவகையில் 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ள எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக இருக்கும் அவுஸ்திரேலியா, வரலாற்றினை மாற்றும் சந்தர்ப்பம் ஒன்றினை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர் மூலம் பெற்றிருக்கின்றது.

கடந்த காலம்

2021ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து T20 உலகக் கிண்ணத் தொடர்களிலும் பங்கேற்றிருக்கும் அவுஸ்திரேலிய அணி, 2010ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடம் பெற்றதே அவ்வணியினுடைய சிறந்த பதிவாக காணப்படுகின்றது.

2010ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணம் தவிர 2007, 2012ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண தொடர்களில் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் இரண்டாவது சுற்றோடு வெளியேறியிருந்தது.

இதுதவிர T20 உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை 29 போட்டிகளில் ஆடியிருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அதில் 16 போட்டிகளில் வெற்றியினையும், 13 போட்டிகளில் தோல்வியினையும் சந்தித்திருப்பதனை கடந்த காலப் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

>> மஹேலவால் T20 ஹீரோவான அகில

தயார்படுத்தல்கள்

T20 உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களை கடந்த ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற T20 தொடருடன் ஆரம்பித்திருந்த அவுஸ்திரேலிய அணி குறித்த தொடரினையும், அதன் பின்னர் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற T20 தொடரினையும் பறிகொடுத்திருந்தது.

இந்த T20 தொடர் தோல்விகள் அவ்வணிக்கு T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக ஏற்பட்ட பின்னடைவு எனக் கருதப்படுகின்ற போதும், பல்வேறு நாடுகளின் உள்ளூர் T20 லீக்குகளில் தொடர்ச்சியாக பிரகாசித்த வீரர்களை கொண்டே T20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணி கட்டமைப்பட்டிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜஸ்டின் லங்கரின் பயிற்றுவிப்பில் T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத் துறையினை நோக்கும் அவ்வணி, அணித்தலைவர் ஆரோன் பின்ச், டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி வீரர்களோடு பலம் பெறுகின்றது.

>> T20 உலகக் கிண்ணம் 2010 இன் ‘Run Machine’ மஹேல ஜயவர்தன

மறுமுனையில் அவ்வணிக்கு மேலதிக துடுப்பாட்ட பலமாக சகலதுறை வீரர்களான கிளன் மெக்ஸ்வெல் மற்றும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அணியின் பந்துவீச்சுத்துறைக்கு வேகப் பந்துவீச்சாளர்களான பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹெசல்வூட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

டேவிட் வோர்னர் – T20 உலகக் கிண்ணத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராக டேவிட் வோர்னர் காணப்படுகின்றார். ஆரம்ப வீரராக களமிறங்கும் டேவிட் வோர்னர், இந்தியன் பிரீீமியர் லீக் போட்டிகளில் சன்ரைஸர்ஸ் அணிக்காகவும் விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ஆடிய அனுபவமும், உலகின் ஏனைய பல்வேறு உள்ளூர் T20 லீக்குகளில் ஆடிய அனுபவமும் டேவிட் வோர்னருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.Australia

கிளன் மெக்ஸ்வெல் – வோர்னருக்கு இணையாக T20 போட்டிகளில் அனுபவம் கொண்டிருக்கும் கிளன் மெக்ஸ்வெலும் அதிக எதிர்பார்ப்பு வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இம்முறை பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிரடி துடுப்பாட்டம் மூலம் அசத்தியிருந்த கிளன் மெக்ஸ்வெல், அதே ஆட்டத்தினை T20 உலகக் கிண்ணத் தொடரிலும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக கிளன் மெக்ஸ்வெல் அவுஸ்திரேலிய அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்தினை பலப்படுத்துவதனை எதிர்பார்க்க முடியும்.

இறுதியாக

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத்திற்கான பயணத்தினை முதல் போட்டியினை எதிர்வரும் 23ஆம் திகதி தென்னாபிரிக்க எதிரான மோதலோடு ஆரம்பிக்கின்றது. சில பின்னடைவுகள் இருந்த போதும் அவுஸ்திரேலியா இந்த T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் பலமிக்க அணிகளில் ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை.

அவுஸ்திரேலிய குழாம் ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), பெட் கம்மின்ஸ், எஸ்டன் ஆகர், ஜோஸ் ஹேசல்வூட், ஜோஸ் இங்கிலிஸ், மிச்சல் மார்ஸ், கிளன் மெக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், மெத்திவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷம்பா

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<