இரண்டாவது T20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றுமா இங்கிலாந்து?

ICC Men’s T20 World Cup 2021

224

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய தனித்துவமான விளையாட்டால், அவர்களுக்கு என்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை இங்கிலாந்து அணி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த ஆறு வருடங்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்குவிப்புகள் மற்றும் வீரர்களின் திறமைகள் என்பன அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

அந்தவகையில், இறுதியாக நடைபெற்ற ஐசிசி உலகக்கிண்ணத்தை கடந்த 2019ம் ஆண்டு வெற்றிக்கொண்ட இங்கிலாந்து அணி, தங்களுடைய இரண்டாவது T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் இம்முறை ஐக்கிய அரபு இராச்சியத்தில் களமிறங்கியுள்ளது.

T20 உலகக் கிண்ணம்; தகுதி சுற்றில் இலங்கைக்கு எதிரான சவால்கள்

நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கான தகுதியை பெற்றுக்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, குழு ஒன்றில் இடம்பிடித்துள்ளது. இந்த குழுவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும்  மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேரடியாக இடம்பிடித்துள்ளதுடன், முதல் சுற்றின் குழு Aயில் முதலிடத்தை பிடிக்கும் அணி மற்றும் குழு Bயில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிகள் குழு ஒன்றில் இணைந்துக்கொள்ளும். அந்தவகையில், இலங்கை அணி, இந்த குழுவில் இணைவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

குழு ஒன்றில் மிகவும் சவாலான அணிகள் உள்ளபோதும், நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கிண்ணத்தின் வெற்றி மற்றும் பலம் மிக்க வீரர்களின் ஆதரவுடன் எதிரணிகளுக்கு இங்கிலாந்து அணி மிகப்பெரும் சவாலை கொடுக்க தயாராகியுள்ளது.

Courtesy – Gettyimages

T20 உலகக்கிண்ணங்களில் இங்கிலாந்து அணியின் பிரகாசிப்பு

இங்கிலாந்து அணி T20 உலகக்கிண்ணத்தை கடந்த 2010ம் ஆண்டு, அவுஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி வெற்றிக்கொண்டது. உலத்தொடர்களில் முதல் கிண்ணமாக, இங்கிலாந்து அணிக்கு இந்த கிண்ணம் அமைந்திருந்தது.

எனினும், இதன் பின்னர் T20 உலகக்கிண்ணங்களில் சராசரியான பிரகாசிப்பையே இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக 2016ம் ஆண்டு T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியிருந்த போதும், இங்கிலாந்து அணியின் கிண்ணத்துக்கான கனவை மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் கார்லோஸ் பிராத்வைட் தகர்த்திருந்தார். பென் ஸ்டோக்ஸின் இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நான்கு சிக்ஸர்களை விளாசி, பிராத்வைட் போட்டியை நிறைவுசெய்தார்.

Courtesy – Gettyimages

குறித்த இரண்டு T20 உலகக்கிண்ணங்கள் மாத்திரமே இங்கிலாந்து அணிக்கு அதிக நினைவுகளை கொடுத்திருந்த போதும், ஏனைய நான்கு T20 உலகக்கிண்ணங்களிலும் இரண்டாவது சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியிருந்தது. T20 உலகக்கிண்ணத்தில்  32 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 15 போட்டிகளில் வெற்றியையும், 16 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதில், ஒரு போட்டி வெற்றித்தோல்வியின்றி நிறைவாகியிருந்தது.

இங்கிலாந்து அணியின் கடந்தகால பிரகாசிப்புகள்

T20I போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கடந்தகால பிரகாசிப்புகள் மிகவும் துள்ளியமாக அமைந்திருக்கின்றன. இங்கிலாந்து அணி விளையாடிய இறுதி 10 இருதரப்பு தொடர்களில், இந்திய அணிக்கு எதிரான ஒரு தொடரில் மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கிறது.

ஏனைய ஒன்பது தொடர்களில் வெற்றியை தக்கவைத்துள்ளதுடன், கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்தது. இதில், மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களை 3-0 என வைட்வொஷ் முறையில் கைப்பற்றியிருந்தது.

குறிப்பாக இந்த ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் T20I தொடர்களில் விளையாடியதுடன், இலங்கை அணியை 3-0 எனவும், பாகிஸ்தான் அணியை 2-1 எனவும் வீழ்த்தியிருந்தது. இதில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் விளையாடியிருக்கவில்லை.

இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ட்ரெவர் பெய்லிஸ் 2015-19ம் ஆண்டுவரை செயற்பட்டிருந்தார். இவரின் பயிற்றுவிப்பில், இங்கிலாந்து அணி ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்றது. தொடர்ந்து, அவர் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார். இதன்பின்னர், தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் கிரிஸ் சில்வர்வூட் இங்கிலாந்து அணியை மேலும் பலமாக்கி வருகின்றார்.

குறிப்பாக இங்கிலாந்து கடந்த காலமாக அச்சமின்றிய கிரிக்கெட்டை ஆடி வருகின்றது. துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சில் மிகவும் பலம் மிக்க வீரர்களை கொண்டிருக்கிறது.

Courtesy – Gettyimages

துடுப்பாட்டத்தில் டேவிட் மலான், ஜேசன் ரோய், ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோஸ், பட்லர் மொயீன் அலி மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறந்த பிரகாசிப்புக்களை கடந்த காலத்தில் வெளிப்படுத்தி வருவதுடன், பந்துவீச்சில் மார்க் வூட், கிரிஸ் வோர்க்ஸ், ரஷீட் கான், டைமல் மில்ஸ் ஆகியோரும் சிறந்த பிரகாசிப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேநேரம், இங்கிலாந்து அணிக்கு மற்றுமொரு சிறந்த பலம், அணித்தலைவர் இயன் மோர்கன். இவரின் தலைமைத்துவம் கடந்த காலத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. ஒருநாள் உலகக்கிண்ணத்தை இவர் தலைமையில் இங்கிலாந்து அணி வெற்றிக்கொண்ட நிலையில், T20 உலகக்கிண்ணத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

எவ்வாறாயினும், அணியிலிருந்து விலகியுள்ள பென் ஸ்டோக்ஸ் மற்றும் உபாதைக்குள்ளாகியுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் இழப்பு, இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, டேவிட் மலான் அதிகமாக எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்ட வீரராக உள்ளார். ஐசிசி T20 துடுப்பாட்ட தரவரிசையில் இவர், முதலிடத்தில் உள்ளதுடன், கடந்த 24 மாதங்களில் 25 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 41.57 என்ற சராசரியில் 873 ஓட்டங்களை குவித்துள்ளார்.

டேவிட் மலானுடன், அனுபவ வீரர் ஜோஸ் பட்லரின், கடந்த 2 வருடத்துக்கான துடுப்பாட்ட சராசரி 50 ஆக உயர்ந்துள்ளது. இவர் ஆரம்பம் மற்றும் மத்தியவரிசை என எந்த இடத்தில் களமிறங்கினாலும், ஓட்டங்களை வேகமாக அதிகரிக்கக்கூடியவர். இவர்களுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர், தங்களுடைய நாட்களில் எதிரணியிடமிருந்து போட்டியை முழுமையாக மாற்றக்கூடியவர்கள்.

Courtesy – Gettyimages

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பார்க்கும் போது,  T20I போட்டிகளில் சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீட்டின் பந்துவீச்சு எதிரணிகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சிய ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு அதிகமாக  சாதகமாக அமையும் எனவே, இவரின் பந்துவீச்சு எதிரணிகளுக்கு அச்சுறுத்தல். ஆதில் ரஷீட் கடந்த இரண்டு ஆண்டுகளில், 25 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆதில் ரஷீட் சுழல் பந்துவீச்சு மூலம் எதிரணிகளுக்கு சவால்கொடுப்பதுடன், மறுபக்கம் மார்க் வூட்டின் வேகம் எதிரணிகளுக்கு மற்றுமொரு சவாலாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிகூடிய வேகத்தில் பந்துவீசுபவர்களில் மார்க் வூட் முக்கியமானவர். இவர், கடந்த இரண்டு வருடங்களில் 12 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே, பந்துவீச்சில் இவர்கள் இருவரும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர்.

இங்கிலாந்து குழாம்

இயன் மோர்கன் (தலைவர்), ஜொனி பெயார்ஸ்டோவ், செம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், ஆதில் ரஷீட், ஜேசன் ரோய், டேவிட் வில்லி, கிரிஸ் வோக்ஸ், மார்க் வூட், கிரிஸ் ஜோர்டன், டொம் கரன், மொயீன் அலி

மேலதிக வீரர்கள் – லியம் டவ்ஸன், ஜேம்ஸ் வின்ஸ், ரீஷ் டொப்ளே

இறுதியாக…

இங்கிலாந்து அணி மிகச்சிறந்த வீரர்களையும், மிகச்சிறந்த வெற்றி பிரகாசிப்புகளுடனும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கு செல்கிறது. எனவே, இங்கிலாந்து அணி தன்னம்பிக்கையுடன் இந்த போட்டி தொடரை ஆரம்பத்திலிருந்து எதிர்கொள்ளும். அதற்கான சக்திகள் முழுவதும் இங்கிலாந்த அணியிடம் உள்ளது.

எனினும், ஐசிசி T20 உலகக்கிண்ணம் போன்ற தொடரின் போது, எந்த அணிகளையும் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக T20I போட்டிகளை எடுத்துக்கொண்டால், அன்றைய தினத்தில் எந்த அணி பிரகாசிக்கின்றதோ, அந்த அணிக்கே வெற்றி. எனவே, முன்னணி அணி, பின்தங்கிய அணி என அணிகளை வரிசைப்படுத்த முடியாது. எனவே, இங்கிலாந்து அணி முன்னணி அணியாக இருந்தாலும், போட்டி தினத்தில் சிறப்பாக பிரகாசித்தால், இரண்டாவது T20 உலகக்கிண்ணத்துக்கான அவர்களுடைய கனவு நனவாகும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…