ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றியுடன் உலகக் கிண்ண தொடரில் இலங்கை

976

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையே நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் சுபர் சிக்ஸ் போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.  

>>இலங்கை அணியின் வெற்றியோட்டம் தொடருமா?

மேலும் இந்த வெற்றியுடன் ஆறு தொடர் வெற்றிகளுடன் இலங்கை கிரிக்கெட் அணி,  ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகுவதோடு 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு, உலகக் கிண்ண தகுதிகாண் தகுதிகாண் சுற்றுத் தொடர் மூலம் தெரிவாகும் எஞ்சிய இரண்டு அணிகளில் ஒன்றாகவும் மாறுகின்றது.

முன்னதாக இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் சுபர் சிக்ஸ் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது. இப்போட்டிக்கான இலங்கை குழாம் உபாதைக்குள்ளான லஹிரு குமாரவிற்குப் பதிலாக மதீஷ பத்திரனவிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

மறுமுனையில் இலங்கை போன்று தொடரில் முதலில் நடைபெற்ற எந்தப் போட்டிகளிலும் தோல்வியடையாத ஜிம்பாப்வே குழாம் தென்டாய் சட்டாராவிற்குப் பதிலாக ப்ராட் எவான்ஸை இணைத்திருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, மதீஷ பத்திரன

ஜிம்பாப்வே XI

ஜோய்லோட் கம்பி, கிரைக் எர்வின் (தலைவர்), சோன் வில்லியம்ஸ், வெஸ்லி மதவ்வரே, சிக்கந்தர் ரஷா, றயான் பேர்ல், லூக் ஜொங்வே, வெலிங்டன் மஸகட்ஷா, றிச்சர்ட் ன்கிரவா, ப்ராட் எவான்ஸ், பிளஸ்ஸிங் முஷாரபனி

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணிக்கு டில்சான் மதுசங்க தனது வேகம் மூலம் நெருக்கடி உருவாக்கினார். டில்சான் மதுசங்க ஜிம்பாப்வே தலைவர் கிரைக் எர்வின் அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். அதன்படி கிரைக் எர்வின் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இதன் பின்னர் அணியின் நான்காம் விக்கெட்டுக்காக சோன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ரஷா ஆகியோர் இணைந்து சற்று அதிரடியான முறையில் இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி தமது தரப்பினை சரிவில் இருந்து மீட்க முயன்றனர். எனினும் இந்த இணைப்பாட்டத்தினை தசுன் ஷானக்க 68 ஓட்டங்களோடு முடிவுக்கு கொண்டு வந்தார். ஜிம்பாப்வே அணியின் நான்காம் விக்கெட்டாக டில்சான் மதுசங்கவின் பிடியெடுப்பில் ஆட்டமிழந்த சிக்கந்தர் ரஷா ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

>>உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேற்றம்

இதன் பின்னர் ஜிம்பாப்வேயின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டத்தோடு அரைச்சதம் கடந்து இலங்கை பந்துவீச்சாளர்களை மிரட்டிய சோன் வில்லியம்ஸ் இன் விக்கெட் மகீஷ் தீக்ஷனவின் அபார பந்துவீச்சோடு வீழ்த்தப்பட்டது. தீக்ஷன மூலமாக போல்ட் செய்யப்பட்ட சோன் வில்லியம்ஸ் 57 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.

சோன் வில்லியம்ஸின் விக்கெட்டின் பின்னர் சரிவு நிலைக்குச் சென்ற ஜிம்பாப்வே அணி தமது இறுதி 5 விக்கெட்டுக்களையும் 38 ஓட்டங்கள் என்கிற இடைவெளியில் பறிகொடுத்து 32.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷன வெறும் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, டில்சான் மதுசங்க 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மதீஷ பத்திரன 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கை 33.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை களத்தில் நின்ற பெதும் நிஸ்ஸங்க தன்னுடைய இரண்டாவது ஒருநாள் சதத்தோடு 102 பந்துகளில் 14 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் பெதும் நிஸ்ஸங்க அணியின் முதல் விக்கெட்டுக்காக திமுத் கருணாரட்னவுடன் 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் வெற்றிக்கு உதவி செய்த ஏனைய துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான திமுத் கருணாரட்ன 30 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களையும் எடுத்தார்.

ஜிம்பாப்வே பந்துவீச்சில் றிச்சர்ட் ன்குரவா ஒரு விக்கெட்டினை சாய்த்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மகீஷ் தீக்ஷன தெரிவானார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<