ICC இன் இந்த தசாப்தத்திற்கான அணிகளில் சங்கா, மாலிங்க

168

2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வருவதனை அடுத்து இந்த தசாப்தத்தில் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களை கொண்டு, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) மூவகைப் போட்டிகளுக்குமான தமது அணிகளை வெளியிட்டிருக்கின்றது. 

>> தென்னாபிரிக்க தொடரிலிருந்து விலகும் தனன்ஞய டி சில்வா

ஐ.சி.சி. இன் இந்த தசாப்பத்திற்கான டெஸ்ட் அணி

அதன்படி, இந்த தசாப்தத்திற்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவனான குமார் சங்கக்கார இடம்பெற்றிருப்பதோடு, இந்த தசாப்தத்திற்கான டெஸ்ட் அணியின் விக்கெட்காப்பாளர் பதவியும் குமார் சங்கக்காரவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

கடந்த 2015ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்த குமார் சங்கக்கார 2010ஆம் ஆண்டில் இருந்து தான் ஓய்வு பெறும் வரையில் 17 சதங்கள் அடங்கலாக 5,000 இற்கு கிட்டவான ஓட்டங்கள் வரை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம், டெஸ்ட் அணியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேநேரம், இப்போது டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோனர், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரும் இந்த தசாப்தத்திற்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். 

மறுமுனையில், பந்துவீச்சினை நோக்கும் போது இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஸ்டுவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் தென்னாபிரிக்க அணியின் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருப்பதோடு அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளராக இந்திய கிரிக்கெட் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினும், பிரதான சகலதுறைவீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் உம் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஐ.சி.சி. இன் இந்த தசாப்பத்திற்கான ஒருநாள் அணி

ஐ.சி.சி. இன் இந்த தசாப்பத்திற்கான ஒருநாள் அணியின் தலைவர் பொறுப்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. டோனி தவிர, இந்திய அணியினைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இந்த ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். 

>> பிடியெடுப்புக்களை கோட்டைவிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இவர்கள் தவிர ஐ.சி.சி. இன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோனர் மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களோடு அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களாக ஏபி.டி. வில்லியர்ஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் காணப்படுகின்றனர். 

பந்துவீச்சில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க, நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் மற்றும் தென்னாபிரிக்க சுழல் நட்சத்திரம் இம்ரான் தாஹிர் ஆகியோர் ஐ.சி.சி. இன் இந்த தசாப்தத்திற்கான ஒருநாள் அணியில் இருக்கின்றனர்.

ஐ.சி.சி. இன் இந்த தசாப்பத்திற்கான T20 அணி

ஐ.சி.சி. இன் இந்த தசாப்தத்திற்கான T20 அணியினை நோக்கும் போது T20 அணியின் தலைவர் பதவியும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியும் இந்த T20 அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். இதன் மூலம் கோலி, ஐ.சி.சி. இன் இந்த தசாப்தத்திற்கான மூன்று வகைப் போட்டிகளுக்குமான அணிகளில் உள்வாங்கப்பட்ட ஒரே வீரராக மாறிக்கொள்கின்றார். 

>> இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் ஜெக் கல்லிஸ்!

கோலி தவிர ஐ.சி.சி. இன் T20 அணியில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் கீரோன் பொலார்ட் ஆகியோரும் T20 அணியில் காணப்படுகின்றனர்.

அதோடு, அவுஸ்திரேலியாவினைச் சேர்ந்த ஆரோன் பின்ச், கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

ஐ.சி.சி. T20 அணியின் பந்துவீச்சாளர்களை நோக்கும் போது இலங்கை அணியின் லசித் மாலிங்க, ஆப்கானிஸ்தான் அணியின் சுழல்பந்துவீச்சாளர் ரஷீட் கான் ஆகியோரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 

ஐ.சி.சி. இன் கடந்த தசாப்தத்திற்கான மூவகைப் போட்டிகளுக்குமான அணிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<