இங்கிலாந்துக்கு எதிராக சதம் பெற வேண்டும் என்கிறார் ஹோல்டர்

124
ICC Twitter

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போதிலும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நெருக்கடியை கொடுத்தனர்.

நீண்ட இடைவேளையின் பின் ஆரம்பமான சர்வதேச கிரிக்கெட்

எனினும், மீண்டும் சிறிய இடைவேளைக்கு பின்னர் பந்துவீச வருகைத்தந்த ஜேசன் ஹோல்டர் பென் ஸ்டோக்ஸை ஆட்டமிழக்க செய்ததுடன், அடுத்தடுத்த விக்கெட்டுகள் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்ட இங்கிலாந்து அணி 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

இந்நிலையில் தான் கைப்பற்றிய விக்கெட்டுகளில் மிகவும் முக்கியமான ஆட்டமிழப்பு, பென் ஸ்டோகஸின் ஆட்டமிழப்பு என ஜேசன் ஹோல்டர் தெரிவித்தார். 

“ஸ்டோக்ஸின் விக்கெட் மிக முக்கியமான ஆட்டமிழப்பு. அவர் களத்தில் சிறந்த முறையில் ஆடிக்கொண்டிருந்தார். அவரின் இரண்டு பிடியெடுப்புகளை நாம் தவறவிட்ட காரணத்தால், அவர் எமக்கு பதிலடி கொடுக்க தயாராகியிருந்தார். அதேநேரம், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லரின் இணைப்பாட்டம் சற்று நீளத் தொடங்கியது. நான் குறித்த விக்கெட்டினை வீழ்த்தாவிடின், அவர்கள் எமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்திருப்பர்.

அதேநேரம், அவருக்கு ஒரே மாதிரியான பந்துகளை வீசுவதற்கு நான் எதிர்பார்த்தேன். அவர், துடுப்பாட்ட முனையில் ஒரு இடத்தில் நிற்காமல், நடந்துகொண்டவாறு துடுப்பெடுத்தாடினார். அதானல், அனைத்து பந்துகளையும் அவரை துடுப்பெடுத்தாட வைக்கும் படி பந்துவீச எண்ணினேன். அதேநேரம், பந்தில் சிறிய அசைவை கொடுக்க முடிந்ததால், அவரின் விக்கெட்டை கைப்பற்ற முடிந்தது”

இதேவேளை, பென் ஸ்டோக்ஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை தடுமாற்றத்துக்கு ஆளாக்கும் வகையில் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், இரண்டாவது நாள் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் திட்டத்துக்கு ஏற்ப பந்துவீசியதாகவும் ஹோல்டர் குறிப்பிட்டார்.

Courtesy – ICC Twitter

“பென் ஸ்டோக்ஸ் எமது பந்துவீச்சாளர்கள், பந்தை பதிக்கும் இடம் மற்றும் பந்துவீசும் திசையை மாற்றுவதற்கு திட்டமிட்டார். அவர் விக்கெட்டினை மறைத்துக்கொண்டு, பந்துவீச்சாளர்களை வலது பக்கம் பந்துவீச வைப்பதற்கு திட்டமிட்டார். அதன் மூலம் அவரால் பந்தினை அடிக்காமல், விட முடியும். 

ஆனால், எமது பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் சரியான அசைவினை கொடுத்திருந்தனர். விக்கெட்டுக்கு நேராக பந்துவீசவும், துடுப்பாட்ட வீரரை ஒவ்வொரு பந்துக்கும் துடுப்பெடுத்தாட வைக்க வேண்டும் என்பதுதான் எமது திட்டமாக இருந்தது. 

முதல் நாள் ஆட்டநேர நிறைவின் பின்னர், நாம் துடுப்பாட்ட வீரர்களை அதிகமாக துடுப்பெடுத்தாட வைக்கவில்லை என்ற விமர்சனம் எமது பந்துவீச்சாளர்களால் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது நாள் மிகச்சிறப்பான முறையில், திட்டத்துக்கு ஏற்ப நாம் பந்துவீசியிருந்தோம்” என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவராக ஜேசன் ஹோல்டர் உள்ளார். இவர், பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இந்த டெஸ்ட் போட்டியில் அணிக்காக துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

“டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சை விடவும், எனது துடுப்பாட்டம் மிகவும் முக்கியமானது. எனவே, துடுப்பாட்டத்தில் எனக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. எனவே, பந்துவீச்சு இன்னிங்ஸை மறந்துவிட வேண்டும். 5 விக்கெட் குவிப்பு உள்ளது. இப்போது,  இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் சதம் மற்றும் 5 விக்கெட் குவிப்பு ஒன்றை கைப்பற்ற வேண்டும். எனவே, இந்தப் போட்டியில் சதம் அடிக்க வேண்டும்” என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க