உலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீரர் புஷ்பராஜ்

991
Image courtesy - Lucion Pushparaj's Facebook

ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் நட்சத்திர உடற்கட்டழகரான லூசன் அண்டன் புஷ்பராஜ், உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

உலக உடற்கட்டழகர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தடவையாகவும் இடம்பெற்ற 10ஆவது உடற்கட்டழகர் வல்லவர் போட்டிகள் தாய்லாந்தின் சியெங் மாய் நகரில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகியது.

ஆஸ்திரிய உடற்கட்டழகர் போட்டியில் லூசியன் புஷ்பராஜுக்கு வெள்ளிப் பதக்கம்

தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என ….

உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 117 வீரர்கள் பங்குபற்றிய இம்முறை போட்டிகளில் 100 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குபற்றிய லூசன் புஷ்பராஜ், இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான், ஈராக் மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட உலகின் முன்னணி நட்சத்திர உடற்கட்டழகரையெல்லாம் பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, உலக உடற்கட்டழகர் போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்ற முதல் இலங்கையராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அண்மைக்காலமாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அவர், 2ஆவது தடவையாகவும் சர்வதேச மட்ட போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்றமை சிறப்பம்சமாகும்.

போட்டியின் பிறகு லூசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”உலகின் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் நான் இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டேன். அதேபோல, போட்டியில் எப்படியாவது பதக்கமொன்றை வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் தான் களமிறங்கினேன். எனது நாட்டுக்காக இந்தப் பதக்கத்தை வென்று கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ரசிகர்களுக்கும், என்னை இதுவரை அழைத்துவருவதற்கு உதவியாக இருந்த இலங்கை மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் ஆசிய உடற்கட்டழகர் சம்பியன் பட்டத்தையும் வென்ற லூசனுக்கு எதிராக ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனால், இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனத்துடன் பல முரண்பாடுகளிலும் அவர் ஈடுபட்டார். விளையாட்டுத்துறை அமைச்சு அல்லது இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனத்தின் எந்தவொரு உதவியும் இன்றி தனது தனிப்பட்ட செலவில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுக்கின்ற லூசனுக்கு உரிய கௌரவமும், வரவேற்பும் வழங்கப்படாது என இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனம் பல தடவைகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசிய உடற்கட்டழகனான மகுடம் சூடிய புசல்லாவை வீரர் ராஜகுமாரன்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் ….

கடந்த வருடம் அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற மிஸ்டர் அட்லஸ் போட்டியில் 4ஆம் இடத்தையும், தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற அவர், இவ்வருடம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் 2ஆம் இடத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்தே தற்போது அவர் உலக சம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைட் நாட்டில் உள்ள உடற்பயிற்சியகம் ஒன்றில் பயிற்சியாளராகக் கடமையாற்றுகின்ற லூசன், 2013ஆம் ஆண்டு கோல்டன் ஸ்ரீலங்கா உடற்கட்டழகராகவும், அதே ஆண்டு 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் உடற்கட்டழகராகவும் தெரிவானார்.

இதன் பிறகு 2006ஆம் ஆண்டு குவைட்டில் நடைபெற்ற உடற்கட்டழகர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<