தண்ணீர் எடுத்துச் சென்ற சர்பராஸ் அஹமட்: முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

22

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மன்செஸ்டரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சர்பராஸ் அஹமட், போட்டியின் இடைநடுவில் சப்பாத்து மற்றும் தண்ணீர் போத்தல்கள் எடுத்து வந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.  

அந்த காட்சியை தொலைக்காட்சி வாயிலான பார்த்த இரசிகர்கள் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்ததுடன், பல முன்னாள் வீரர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

பட்லர் – வோக்ஸ் இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து

இங்கிலாந்துபாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்த தொடரின் முதலாவது போட்டி மன்செஸ்டர் நகரில் நடைபெற்றதுடன், அதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியது.  

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்க்ஸ் துடுப்பாட்டத்தின் போது சர்பராஸ் அஹமட் களத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்றார்

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள், அவர் ஏன் தண்ணீர் எடுத்து வருகிறார்? என கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழந்த போது களத்தில் இருந்த வீரருக்கு சர்பராஸ் அஹமட் சப்பாத்து ஏந்தி வந்தார். அதைக் கண்ட பாகிஸ்தான் இரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கடும் கோபம் கொண்டனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சர்பராஸ் அஹமட்டை இப்படி சப்பாத்து மற்றும் தண்ணீர் போத்தல்கள் தூக்க வைத்ததற்கு அந்த அணியின் முன்னாள் தலைவர் சொயிப் அக்தர் காட்டமாக விமர்சித்துள்ளார். அந்நாட்டின் போஸ் நியூஸ் என்ற தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில்,

“முன்னாள் தலைவர் சர்பராஸ் அஹமட்டை இப்படி சப்பாத்து மற்றும் தண்ணீர் போத்தல்கள் தூக்க வைத்ததை கண்டதும் எனக்கு ஆத்திரம் வந்தது. பாகிஸ்தான் அணியை நான்கு வருடங்களாக இவரா வழிநடத்தி இருக்கிறார்? என கேட்க தோன்றியது

இந்த வகையில் தான் அவர் அணியையும் வழிநடத்தி இருக்கக்கூடும். சம்பியன்ஸ் கிண்ண சம்பியன் பட்டம் வென்று தந்த ஒரு தலைவர் இப்படி தனது நிலை அறியாமல் இயங்கக் கூடாது. தனக்கென ஒரு அங்கீகாரம் மற்றும் சுயமரியாதையை கொண்டிருக்க வேண்டும்.

இவர் இப்படி இருப்பதனால் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தன்னுடைய ஆதிக்கத்தை அணியில் செலுத்திச் சென்று விட்டார்” என காரசாரமாக சொயிப் அக்தர் பேசியிருந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான ஷீத் லத்தீப் இது குறித்து கூறுகையில்

“சிரேஷ் வீரர்கள் மொஹமட் ஆமிர், வஹாப் ரியாஸ் அணியின் ஜேர்சியைக் கூட அணியாமல் பயிற்சி உடையில் இருந்ததை சுட்டிக் காட்டி சர்பராஸ் அஹமட் அணிக்காக இதை செய்துள்ளார். இது நடந்திருக்கக் கூடாது” என விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்ளூர் போட்டியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு

இதுஇவ்வாறிருக்க, குறித்த சம்பவத்துக்கு பதிலளித்த பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் மிஸ்பா உல் ஹக் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில்

“அணியில் இப்படி வீரர்கள் சப்பாத்து மற்றும் தண்ணீர் போத்தல்கள் வீரர்களுக்கு எடுத்துச் செல்வது இயல்பான விடயம். அதை பெரிதுபடுத்தி பேசுவதில் எவ்வித நியாயமும் இல்லை

12 ஆவது வீரராக அணியில் நான் இருக்கையில் பலமுறை இப்படி சப்பாத்து மற்றும் தண்ணீர் போத்தல்கள் எடுத்துச் சென்று இருக்கிறேன். இது வேலைகளை பகிர்ந்து செய்வதே தவிர எவருடைய உத்தரவுக்கும் மற்றவர்கள் பணிந்து செல்வது அல்ல. இதனை புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சர்பராஸ் அஹமட் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார். அவர் 2019 உலகக் கிண்ணத் தோல்விக்கு பின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார். அடுத்த சில மாதங்களில் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சயீட் அன்வரின் 24 வருட சாதனையை முறியடித்த ஷான் மசூத்

பின்னர், அணியில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்ததுடன், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் அவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே, இறுதி பதினொருவர் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் அவர் மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சர்பராஸ் அஹமட்டுக்கு பதில் பாகிஸ்தான் அணியில் மொஹமட் ரிஸ்வான் விக்கெட் காப்பாளராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க