நெய்மார், ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரை விட சிறந்த வீரர் நானே – எடில்சன்

81
Edilson

இப்போது இருக்கும் சிறந்த கால்பந்து வீரர்களை விட தானே  சிறந்த வீரர் என பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கால்பந்து வீரரான எடில்சன்  தெரிவித்திருக்கின்றார்.

முன்கள வீரரான எடில்சன் கடந்த 2002ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பெற்றிருந்தார். எடில்சன் கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றதை வைத்தும், தனது திறமையினை அடிப்படையாக வைத்துமே தற்போது இருக்கும் வீரர்களை விட தான் சிறந்த வீரர் எனக் கூறுகின்றார். 

>> “மெஸ்ஸியை விட ரொனால்டினோ மிகச்சிறந்த வீரர்” – கார்டெட்டி

அதன்படி, இப்போதைய கால்பந்து உலகில் சிறந்த வீரர்களாக இருக்கும் பிரேசில் வீரரான நெய்மார், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி ஆகியோர் உலகக் கிண்ணத்தை வெல்லும் அணியில் இடம்பெற்றால் மாத்திரமே அவர்களை தன்னை விட சிறந்த வீரர்களாக கருத முடியும் எனக் குறிப்பிடுகின்ற எடில்சன், போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட தான் அதிக திறமையை வைத்துள்ளதாக நம்புகின்றார்.

”எனது கணக்கின் படி, நான் (எனது நாட்டு வீரரான) நெய்மாரை விட சிறந்த விதத்தில் விளையாடியிருக்கின்றேன். அவர் (நெய்மார்) என்னை விட சிறந்த வீரர் எனில், உலகக் கிண்ணம் ஒன்றை வென்று காட்ட வேண்டும்.” 

என்னை விட சிறந்த வீரராக மெஸ்ஸி இருப்பதாக நான் கருத வேண்டுமெனில், அவரும் உலகக் கிண்ணம் ஒன்றை வெற்றி பெற வேண்டும். 

”கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் வலிமை மாத்திரமே இருக்கின்றது, அவர் பந்தினை தனது இரண்டு கால்களினாலும் சிறப்பாக உதைக்கின்றார். ஆனால், நான் அவரை விட திறமை அடிப்படையில் சிறந்தவனாக இருக்கின்றேன்.” என்றார்.  

தனது நாட்டுக்காக 21 கால்பந்து போட்டிகளில் மாத்திரம் பங்கேற்றிருக்கும் எடில்சன் கழகமட்ட கால்பந்து போட்டிகளில் தனது நாட்டு அணிகளான பல்மைராஸ், கொரிந்தியன்ஸ் ஆகியவற்றுக்கு நான்கு தடவைகள் சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.   

>> Watch – வாக்கெடுப்பில் தங்கியுள்ள பிரீமியர் லீக்கின் எதிர்காலம் ! | FOOTBALL ULLAGAM

அதேநேரம், சிறந்த கால்பந்து வீரர்களுக்காக பிரான்ஸ் நாட்டு சஞ்சிகையினால் வழங்கப்படும் ”Ballon d’Or” விருதிற்கு கூட இதுவரை பரிந்துரை செய்யப்படாத எடில்சன், ஐரோப்பிய கழக கால்பந்து லீக் போட்டிகளில் போர்த்துகலின் பென்பிக்கா அணிக்காக சிறிது காலம் விளையாடிய அனுபவத்தினை மாத்திரம் கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக தனது கால்பந்து வாழ்வில் குறைந்த அடைவுமட்டங்களை மாத்திரமே பெற்றிருக்கும் எடில்சன் நெய்மார், ரொனால்டோ போன்ற வீரர்கள் உலகக் கிண்ணம் ஒன்றை வென்ற கால்பந்து அணியில் இடம்பெறாது விட்டமைக்காக தன்னை விட சிறந்த வீரர்கள் இல்லை எனக் கூறியிருக்கும் கருத்து தற்போது கால்பந்து உலகிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இந்நிலையில், எடில்சன் பல தனிப்பட்ட விருதுகளுடன் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்காக வழங்கப்படும் ”Ballon d’Or” விருதினை மூன்று தடவைகள் வென்ற ரொனால்டோவை விட தன்னிடம் அதிக திறமைகள் இருக்கின்றது எனக் கூறியிருக்கும் கருத்து பலருக்கும் வியப்பைத் தருகின்றது.   

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<