9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 34ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ரஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் முதலில் குஜராத் லயன்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.  குஜராத் லயன்ஸ் அணி சார்பில் எரொன் பிஞ்ச் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும், சுரேஷ் ரயினா 10 பந்துகளில் 20 ஓட்டங்களையும், டுவயின் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர். சன்ரயிசஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறினார் மிலேன்

பதிலுக்கு 127 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் குஜராத் லயன்ஸ் அணியை சன் ரயிசஸ் ஹைதராபாத்  அணி 6 பந்துகள் மீதமிருக்க 5 விக்கட்டுகளால் வெற்றி ஈட்டியது.

சன் ரயிசஸ் அணி சார்பாக ஷீகர் தவான் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல்  47 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 17 பந்துகளில் 24 ஓட்டங்களையும், தீபக் ஹூதா 12 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் லயன்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் தவால் குல்கர்னி மற்றும் டுவயின் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்