அயர்லாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது ஓமான்

ICC Men's Cricket World Cup Qualifier

11077
Ireland vs Oman Match

அயர்லாந்து அணிக்கு எதிராக புலாவாயோ அத்லட்டிக் கிளப் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற B குழுவுக்கான ICC உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 5 விக்கெட்டுகளால் ஓமான் அணி அபார வெற்றியீட்டியது.

அணித் தலைவர் ஜீஸான் மக்சூத்தின் சகலதுறை ஆட்டம் மற்றும் காஷ்யப் பிரஜாபதி, ஆகிப் இல்யாஸ் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் ஓமான் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் B குழுவுக்கான 2 போட்டிகள் நேற்று (19) நடைபெற்றன. இதில் 4ஆவது போட்டியில் அயர்லாந்து – ஓமான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஓமான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் கிடைக்கவில்லை.

இதில் அண்டி மெக்பிரைன் 20 ஓட்டங்களுடனும், போல் ஸ்டெர்லிங் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அணித் தலைவர் அண்டி போல்பர்னியும் 7 ஓட்டங்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய லோர்கன் டக்கர் 26 ஓட்டங்களுடன் நடையைக் கைட்டினார்.  இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹெரி டெக்டர் – ஜோர்ஜ் டக்ரெல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியதுடன், இருவரும் அரைச் சதம் கடந்தும் அசத்தினர்.

அதன்பின் 52 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஹெரி டெக்டர் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோர்ஜ் டக்ரேல் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து களமிறங்கிய கரெத் டெலானி (20), மார்க் அடையார் (15), கிராஹம் ஹூம் (15) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை எடுக்க அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களை சேர்த்தது. ஓமான் அணி தரப்பில் பிலால் கான் மற்றும் பயாஸ் பட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதன்பின் 282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமான் அணிக்கு காஷ்யப் பிரஜாபதி – ஜதீந்தர் சிங் ஜோடி சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்தனர். இதில் ஜதீந்தர் சிங் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து பிரஜாபதியுடன் ஜோடி சேர்ந்த ஆகிப் இ;ல்யாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதம் கடந்து கைகொடுத்தனர்.

எனினும், ஆகிப் இல்யாஸ் 52 ஓட்டங்களுடனும், பிரஜாபதி 72 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ஜீஸான் மக்சூத் – மொஹமட் நதீம் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதில் அரைசதம் கடந்த ஜீஸான் மக்சூத் 59 ஓட்டங்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அயான் கானும் 29 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார். ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொஹமட் நதீம் 46 ஓட்டங்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இறுதியில் ஓமான் அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஓமான் பெற்ற முதல் வெற்றி இதுதான். அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்ட அணித் தலைவர் ஜீஸான் மக்சூத் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<